இராமநாதபுரம்: ஜுன், 21–
நாடு முழுவதும் ஜுன் 21 ந்தேதி சர்வதேச யோகா தினம் கடைபிடிக்கப் படுகிறது. யோகா என்பது யூஜ் என்ற வடமொழி சொல்லில் இருந்து உருவானது. மனிதனிடம் உள்ள உடல், உயிர், மனம் ஆகியவை பொருந்தி போவதற்கும் தனிமனிதன், மனித சமூகம், இயற்கை இந்த மூன்றோடு பொருந்தி போவதற்கும் வடிவமைக்கப் பட்டது யோக கலையாகும்.
இந்தியாவில் தோன்றிய யோகாவை பதஞ்சலி முனிவர் தனது யோக முத்ரா நூலில் தொகுத்து வழங்கியுள்ளார்.
இன்றைய காலகட்டத்தில் மருத்துவ உலகில் நோய் வராமல் காத்துக் கொள்ளவும் உடல் நலத்தை மேம் படுத்தவும் யோகாவை பெரும் பாலோனோர் பயன் படுத்த தொடங்கியுள்ளனர்.
இத்தகைய சிறப்பு வாய்ந்த யோகா கலையை ஜுன் 21 ந்தேதி சர்வதேச யோகா தினமாக நாடு முழுவதும் கொண்டாடப் படுகிறது.
அந் நாளை சிறப்பிக்கும் வகையில் இராமநாதபுரத்தில் மத்திய அரசு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகம் மற்றும் நேரு யுவ கேந்திரா ராமநாதபுரம், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் ராமநாதபுரம் ஆகியவற்றின் சார்பில் சர்வதேச யோகா தின விழா ராமநாதபுரம் சீதக்காதி சேதுபதி விளையாட்டு மைதானம் வேலுமாணிக்கம் ஹாக்கி அரங்கில் நடந்தது. விழாவிற்கு மாவட்ட ஆட்சியர் கொ.வீரராகவ ராவ் தலைமை வகித்தார். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஓம் பிரகாஷ் மீனா முன்னிலை வகித்தார். யோகா பேராசிரியர் தரணி முருகேசன் யோகா செயல் விளக்கம் மற்றும் மூச்சு பயிற்சி அளித்தார். மாவட்ட விளையாட்டு அலுவலர் செந்தில் குமார் வரவேற்றார். இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு யோகா பயிற்சி செய்தனர். நேரு யுவ கேந்திரா ஒருங் கிணைப்பாளர் நோமான் அக்ரம் நன்றி கூறினார்.