சோழவரம், ஜூன். 01 –
திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அருகேவுள்ள மாபுஸ்கான் பேட்டையில், கோழி தீவனம் தயார் செய்யும் தனியார் தொழிற்சாலை இயங்கி வருகிறது.
இத்தொழிற்சாலையில் கோழி இறைச்சி கழிவுகள், மீன் கழிவுகள் உள்ளிட்ட பலதரப்பட்ட மாமிச கழிவுகளை சென்னை மற்றும் பல்வேறு இடங்களில் இருந்து கொண்டு வரப்பட்டு இத்தொழிற்சாலையில் சேமித்து வைத்து, அவ்விறைச்சிக் கழிவுகள் கொண்டு கோழி தீவனம் தயார் செய்யப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்காக வாகனங்களில் கொண்டு வரப்படும் கோழி மற்றும் மீன் இறைச்சிகளாலும், மேலும் கம்பெனியில் சேமிக்கப்படும் கழிவுகளாலும் அப்பகுதியில் அத்தொழிற்சாலை அருகாமையில் வசித்து வரும், பொது மக்களுக்கு சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தும் வகையில் உள்ளதாகவும், மேலும் அதனால் பல்வேறு தோல் மற்றும் உடல் சம்பந்தப்பட்ட தொற்று நோய்கள் ஏற்பட்டு பெரும் அவதிக்குள்ளாகி வருவதாகவும் அப்பகுதி மக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் தீவனம் தயாரிக்கும் போது அதிலிருந்து வெளியேறும் கழிவின் நாற்றம் அப்பகுதியில் வீசும் காற்றில் கலந்து மாசு ஏற்படுத்தி வருவதாகவும், அதனால் சுற்று வட்டார பகுதி மக்களுக்கு பல்வேறு தொற்று நோய்களையும் சுவாசப் பிரச்சினைகளையும், தூக்கமில்லமையும் ஏற்படுத்தி வருவதாக அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இதனால் அப்பகுதி மக்கள் கம்பெனிக்கு வரும் வாகனங்களை சிறை பிடித்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் இப்புகார் குறித்து துறைச்சார்ந்த மற்றும் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.






















