புதுடெல்லி:

ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரண்டாக பிரிந்தது.

இரண்டாக பிரிந்த அ.தி.மு.க.வில் ஓ.பன்னீர் செல்வம் மற்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பு ஒன்று சேர்ந்தது. சசிகலா- டி.டி.வி. தினகரன் அணி தனியாக செயல்படுகிறது.

இந்த இரண்டு தரப்பும் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கொண்டாடியது. இதை தொடர்ந்து 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் தேர்தல் கமிஷன் அந்த சின்னத்தை முடக்கியது.
பல்வேறு விசாரணைக்கு பிறகு 2017-ம் ஆண்டு நவம்பர் 23-ந்தேதி இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வின் எடப்பாடி பழனிசாமி- ஓ.பன்னீர்செல்வம் தரப்புக்கு சொந்தம் என்று தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இதை எதிர்த்து தினகரன் தரப்பு டெல்லி ஐகோர்ட்டை அணுகியது. இந்த வழக்கில் கடந்த 2 வாரத்துக்கு முன்பு தீர்ப்பு வழங்கப்பட்டது.

இரட்டை இலை சின்னம் அ.தி.மு.க.வுக்கே என்று தீர்ப்பளித்தது. மேலும் இரட்டை இலை சின்னத்தை அ.தி.மு.க.வுக்கு தேர்தல் ஆணையம் ஒதுக்கியது சரியே என்று கூறி தினகரன் மனுவை தள்ளுபடி செய்தது.

இதை எதிர்த்து தினகரன் சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தார்.

இந்த அப்பீல் மனுவை விரைவாக விசாரிக்க வேண்டும் என்று தினகரன் தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் முறையிடப்பட்டது. இதை அவசர வழக்காக விசாரிக்க வேண்டிய நிர்பந்தம் இல்லை என்று சுப்ரீம் கோர்ட்டின் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தெரிவித்தார்.

தினகரனின் அப்பீல் மனு வருகிற 15-ந்தேதி விசாரணைக்கு வருகிறது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here