புதுடெல்லி:
வெளிநாட்டு வாழ் இந்தியர்களில் திருமணம் முடிந்து, மனைவியரை கைவிட்டவர்கள் குறித்து மத்திய பெண்கள் நல அமைச்சகத்தின் அதிகாரம் படைத்த அமைப்பின் உதவியோடு, விசாரணை நடத்தப்பட்டது.
இந்த விசாரணையில் 45 பேர் மனைவியரை கைவிட்டு அந்தந்த நாடுகளில் வாழ்வது கண்டறியப்பட்டது. இது குறித்து மேனகா கூறுகையில், ‘வெளிநாடுகளில் வாழும் திருமணமான இந்தியர்களில், மனைவியரை கைவிட்டவர்கள் மீதான நடவடிக்கை எடுக்க மசோதா ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் மூலம் 45 பேர் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களின் பாஸ்போர்ட்கள் உடனடியாக முடக்கப்பட்டன’ என கூறினார்.
இந்த மசோதா வெளியுறவுத்துறை அமைச்சகம், மத்திய குழந்தை மற்றும் பெண்கள் நலத்துறை அமைச்சகம், மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம், மத்திய உள்துறை அமைச்சகம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.