கும்பகோணம், ஏப். 16 –
கும்பகோணம் அருகே ரூ. 30 லட்சத்திற்கு விற்பனை செய்ய முயன்ற உலோகத்திலான நடராஜர் சிலையை மீட்டு, 3 பேரை கைது செய்து சிலை கடத்தல் தடுப்பு பிரிவு காவல்துறையினர் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
கும்பகோணத்தில் சிலை திருட்டு தடுப்பு பிரிவு காவல்துறை இயக்குனர் முரளி உத்தரவின்படி தடுப்பு பிரிவு தலைவர் தினகரன் வழிகாட்டலுடன் கூடுதல் துணை கண்காணிப்பாளர் ராஜாராம் தலைமையில் உதவி ஆய்வாளர் சின்னதுரை, சிறப்பு உதவி ஆய்வாளர் ராஜகோபால், தலைமை காவலர்கள் செல்வம், லெனின் ஆகியோர் கொண்ட குழுவினர் கடந்த 14ம் தேதி தஞ்சாவூர் மாரியம்மன் கோயில் புறவழிச்சாலை கும்பகோணம் சாலை சந்திப்பில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.
இந்நிலையில் அப்பகுதியில் நின்று கொண்டிருந்த பாபநாசம் தாலுக்கா ராஜகிரி கரைமேடு கேசவன் மகன் பிரபாகரன் (27), அதே பகுதியைச் சேர்ந்த அல்லா பாக்ஷ் மகன் பைசல் அகமது (27), அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி எஸ். தோட்டம் சுலைமான் பாட்ஷா மகன் சாகுல் அமீது (26) ஆகியோரை சந்தேகத்தின் பேரில் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பேசி உள்ளனர்.
அதனைத் தொடர்ந்து அவர்களிடம் காவல்துறையினர் மேற்கொண்ட விசாரணையில் அவரிடம் விற்பனை செய்வதற்காக வைத்திருந்த சுமார் முக்கால் அடி உயரமும், ஒரு கிலோ எடை கொண்ட உலோகத்திலான நடராஜர் சிலை இருப்பது தெரியவந்தது. மேலும் அந்த சிலையை ரூ. 30 லட்சத்திற்கு விற்க முயன்றதும் விசாரணையில் தெரிய வந்ததையடுத்து சென்னை சிலை திருட்டு தடுப்புப் பிரிவில் 3 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
புலன் விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ள காவல் ஆய்வாளர் இந்திரா நடராஜர் உலோக சிலையை கைப்பற்றி மூன்று பேரையும் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.





















