இராசிபுரம், மார்ச். 22 –
ராசிபுரம் பகுதியில் தொடர் திருட்டில் ஈடுபட்ட குண்டாஸ் கைதி உள்ளிட்ட மூன்று கொள்ளையார்கள் போலீசாரின் வாகனச் சோதனையின் போது பிடிப்பட்டனர். அவர்கள் மூவரையும் கைது தொடர் சட்ட நடவடிக்கைகளில் போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் பகுதியில் எம்.எல்.ஏ. அலுவலகம் அருகே உள்ள கோவில் உண்டியல், வீ நகர் ரோடு பகுதியில் உள்ள ஒரு கோவில் உண்டியல், ராசிபுரம் – சேலம் சாலையில் உள்ள மூன்று மளிகை கடைகள், சேந்தமங்கலம் பிரிவு சாலையில் உள்ள பேக்கரி, ஆயில்பட்டி பகுதியில் இருசக்கர வாகனம் என தொடர் திருட்டு சம்பவம் கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்தது.
இதனைத் தொடர்ந்து கொள்ளைச் சம்பவங்களை தடுக்கவும், கொள்ளையர்களைப் பிடிக்கவும் ராசிபுரம் டி.எஸ்.பி. செந்தில்குமார் தலைமையில் தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்த நிலையில், மசக்காளிப்பட்டி பகுதியில் வாகன தணிக்கை பணியில் போலீசார் ஈடுபட்டிருந்தனர். அப்போது, இருசக்கர வாகனம் ஒன்றில் மூன்று பேர் வந்தனர். அந்த வாகனம் திருடப்பட்டது என்பதை அறிந்த போலீசார் அவர்களிம் தீவிர விசாரணை நடத்தினர். இவர்கள் ராசிபுரத்தில் தொடர் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் என்பது போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
இதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டம் சென்னகிரியைச் சேர்ந்த ரப்பர் என்கிற ஜெயபிரகாஷ் 22, தாதகாப்பட்டியைச் சேர்ந்த சண்முகம் 33, தாதகாப்பட்டி கேட் பகுதியைச் சேர்ந்த சைக்கோ என்கிற விஜய் 23 ஆகிய மூவரையும் போலீசார் கைது செய்தனர். இதில் முதல் குற்றவாளியான ஜெயபிரகாஷ் குண்டர் சட்டத்தில் கைதானவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர்களிடமிருந்து, கொள்ளையடிக்கப் பயன்படுத்திய ஆயுதங்களான கடப்பாரை கம்பி, கத்தி, கையுறை மற்றும் 3 செல்போன், 1 பல்சர் பைக் ரூ.5,200 ரொக்க பணம் ஆகியவற்றை அவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தனர். மேலும் இவ்வழக்கு சம்பந்தமாக சட்ட மேற் நடவடிக்கைகளில் இராசிபுரம் காவல்நிலைய போலீசார் ஈடுப்பட்டு வருகின்றனர்.