ராமநாதபுரம், ஆக. 30- ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் தலைமையில் விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தாவது: மாவட்டத்தின் சராசரி மழை அளவு 867 மி.மீ., 2016-17ம் ஆண்டில் 348.64 மி.மீ. அளவும், 2017-18ம் ஆண்டில் 599.94 மி.மீ. அளவும் 2018-19ம் ஆண்டில் 663.67 மி.மீ. அளவும் மழை பதிவாகியுள்ளது. நடப்பு ஆண்டில் ஜனவரி மாதம் முதல் ஆகஸ்ட் வரை 63.60 மி.மீ. மழை அளவு மட்டுமே பெறப்பட்டுள்ளது. இது சராசரி மழையைவிட 803.72 மி.மீ குறைவு ஆகும்.
தமிழக முதலமைச்சர் நிலத்தடி நீர் அளவினை மேம்படுத்திடும் வகையில் மழைநீரை வீணாக்காமல் சேமிக்க ஏதுவாகவும் தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் குடிமராமத்து திட்ட பணிகளின் கீழ் கண்மாய் புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டுள்ளார்கள். அதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் ரூ. 37.59 கோடி மதிப்பில் 69 பொதுப்பணித்துறை கண்மாய்களில் அந்தந்த விவசாய பாசனதாரர் நலச்சங்கங்களின் மூலம் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதேபால் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறையின் சார்பாக ஊராட்சி அளவில் உள்ள 224 சிறுபாசன கண்மாய்கள், 988 ஊரணிகளில் தமிழ்நாடு நீர்வள ஆதார பாதுகாப்பு மற்றும் நீர் மோலண்மை இயக்கப் பணிகள் திட்ட்ததின் கீழ் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஒவ்வொரு சிறு பாசன கண்மாய்க்கும் தலா ரூ.5 லட்சம் மதிப்பிலும் ஊரணிகள் தலா ரூ.ஒரு லட்சம் மதிப்பிலும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள திட்டமிடப்பட்டு ரூ.21.8 கோடி மதிப்பில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
மேலும் நடப்பாண்டில் ராமநாதபுரம் மாவட்டத்தில் நபார்டு நிதி உதவியுடன் 2 ஆயிரத்து 575 பண்ணை குட்டைகளை அமைக்க ரூ.25.75 கோடி நிதி ஒதுக்கீடு பெறப்பட்டுள்ளது. இதற்காக இதுவரை ஆயிரத்து 416 விண்ணப்பங்கள் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்டுள்ளன. பண்ணைக் குட்டைகளை வெட்டும் பணி தற்போது துவங்கப்பட்டு 505 பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. பிரதம மந்திரியின் புதிய பயிர் காப்பீடு திட்டத்தின் கீழ் 2016-17ம் ஆண்டில் ஒரு லட்சத்து 20 ஆயிரத்து 846 விவசாயிகளுக்கு ரூ. 529.06 கோடி மதிப்பிலும் 2017-18ம் ஆண்டில் ஒரு லட்சத்து 44 ஆயிரத்து 369 விவசாயிகளுக்கு ரூ.469.99 கோடி மதிப்பீடும் காப்பீடு இழப்பீட்டு தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல 2018-19ம் ஆண்டில் ஒரு லட்சத்து 6 ஆயிரத்து 984 விவசாயிகள் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 67 ஹெக்டேர் பரப்பளவில் பல்வேறு வகையான பயிர்களை பயிற் காப்பீடு செய்துள்ளனர். மேலும் பிரதம மந்திரி கிசான் திட்டத்தின் கீழ் விவசாயிகளை சேர்க்கும் பணி மற்றும் வங்கி கணக்கு விபரங்கள் சரிபார்க்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பிரதம மந்திரி நுண்ணீர் பாசன திட்டம், சிறுதானிய பயிர்கள் சாகுபடி மற்றும் மக்காச்சோள படைப்புழுவை கட்டுப்படுத்தும் முறைகள் பற்றி விழிப்புணர்வு முகாமச்கள் நடைபெற்று வருகின்றன. நெல், சிறுதானியம் மற்றும் பயறு வகை பயிர் விதைகள் மொத்தம் ஆயிரத்து 459.40 மெ.டன் அரசு மற்றும் தனியார் கிடங்குகளில் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபால் தனியார் உரங்கடைகளில் 3 ஆயிரத்து 648 மெ.டன் கூட்டுறவு சங்கங்களில் ஆயிரத்து 381 மெ.டன் என மொத்தம் 5 ஆயிரத்து 29 மெ.டன் உரங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்தார். கூட்டத்தில் வேளாண்மை துறை இணை இயக்குனர் சொர்ணமாணிக்கம், வருவாய் கோட்டாட்சியர்கள் கோபு (ராமநாதபுரம் பொறுப்பு), ராமன் (பரமக்குடி), பொதுப்பணித்துரை செயற்பொறியாளர் (நீர்வள ஆதார அமைப்பு ) வெங்கிடகிருஷ்ணன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சேக் அப்துல்லா, கூட்டுறவு சங்கங்களின் இணைபதிவாளர் முருகேசன், வேளா்மை பொறியியல் துறை செயற்பொறியாளர் பாலாஜி உட்பட பலர் பங்கேற்றனர்.
முகப்பு மாவட்டம் ராமநாதபுரம் ராமநாதபுரம் மாவட்டத்தில் மழைநீரை சேமிக்க 2575 பண்ணை குட்டைகள் அமைக்கும் பணி தீவிரமாக நடைப்பெறுவதாக மாவட்ட...