சென்னை, மார்ச். 29 –
சென்னை அருகே ஆற்காடு சாலை வடபழனி முதல் போரூர் வரையிலான மெட்ரோ ரயில் பணியானது தற்போது நடைபெற்று வருகிறது.. இந்த நிலையில் வளசரவாக்கத்தில் சாலையின் நடுவே தடுப்புகள் அமைத்து நடுவே பில்லர்கள் எழுப்புவதற்கான பணியும் நடந்து வருகிறது.
அதனைத் தொடர்ந்து அப்பகுதியில் மெட்ரோ பணியில் ஈடுப்பட்டு வரும் ஊழியர்கள் ராட்சத இயந்திரங்கள் கொண்டு பள்ளம் தோண்டும் பணியில் ஈடுப்பட்டனர். அப்போது, பூமிக்கு அடியில் செல்லும் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்ப்பட்டது.
அதனால் அப்பகுதியில் உள்ள சாலைகளின் இரு புறங்களிலும் அக்குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி பெருக்கெடுத்து செல்கிறது. இதனால் பள்ளி, கல்லூரி மற்றும் வேலைக்கு செல்வோர் உள்ளிட்ட வாகன ஓட்டிகளும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். மேலும், மெட்ரோ பணி செய்யும் இடத்தில் குடிநீர் குளம் போல் தேங்கி நிற்பதால், அப்பகுதியில் நடைப்பெறும் மெட்ரோ பணியும் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
மேலும், குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பின் காரணமாக அப்பகுதியில் தொடர்ந்து கடந்த 2 நாட்களாக குடிநீர் வெளியேறி சாலையில் வீணாகி வருகிறது. மேலும் சென்னை மாநகருக்கு தேவையான குடிநீர் இந்த குழாய் மூலமாகத்தான் கொண்டு செல்லப்படுகிறது எனவும் தகவல் தெரிய வருகிறது. மேலும் தற்போது கோடைக்காலம் தொடங்கியுள்ள நேரத்தில் குடிநீர் தேவைகள் அதிகம் இருக்கும். எனவே இந்த குடிநீர் குழாயில் ஏற்பட்டுள்ள உடைப்பை உடனடியாக சரிசெய்து இரு தினங்களாக வீணாகி ஓடும் தண்ணீரை கட்டுப்படுத்த வேண்டுமென அப்பகுதி குடியிருப்பு வாசிகள் மற்றும் அப்பகுதியை கடந்துச்செல்லும் அனைவரும் துறை சாரந்த அலுவலர்களுக்கும் மற்றும் அரசுக்கும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் ஏற்கனவே சில மாதங்களுக்கு முன்பு இதுப்போன்று மெட்ரோ பணியின் போது பள்ளம் தோண்டும் போது, குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக சென்றது என்பது மேலும் குறிப்பிடத்தக்கதாகும்.






















