ராமநாதபுரம், ஜூன் 5-
ராமநாதபுரம் மாவட்டத்திலுள்ள 2 ஆயிரத்து 306 குக்கிராமங்களில் ஆயிரத்து 40 கிராமங்களுக்கு தினந்தோறும், 565 கிராமங்களுக்கு 2 நாட்களுக்கு ஒரு முறையும், 701 கிராமங்களுக்கு குறைந்தபட்சம் 3 நாட்களுக்கு ஒருமுறையும் குடிநீர் வினியோகம் செய்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் வீரராகவ ராவ் கூறினார். ராமநாதபுரத்தில் செய்தியாளர்கள் சந்திப்பின்போது அவர் தெரிவித்ததாவது: தமிழக முதல்வர் உத்தரவின்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் கோடை காலத்தில் பொது மக்கள் குடிநீர் தேவையினை பூர்த்தி செய்திட ஏதுவாக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 4 நகராட்சிகள், 7 பேரூராட்சிகள், 329 ஊராட்சிகள், 2 ஆயிரத்து 306 கு்கிராமங்கள் உள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 79.78 எம்எல்டி அளவில் குடிநீர் தேவையென கணக்கிடப்பட்டுள்ளது.
அதன்படி தற்போதைய நிலையில் காவிரி கூட்டுக்குடிநீர் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு 30 முதல் 35 எம்எல்டி அளவிலும், ஊரக குடிநீர் திட்டத்தின் கீழ் நாளொன்றுக்கு சுமார் 3 முதல் 6 எம்எல்டி அளவிலும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர அந்தந்த உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பொதுமக்களின் தேவைக்கேற்ப உறைகிணறு, ஆழ்துளைக்கிணறு, திறந்தவெளிக்கிணறு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் போன்ற பல்வேறு உள்ளூர் குடிநீர் ஆதாரங்கள் மூலம் 40.54 எம்எல்டி அளவில் பொது மக்களின் குடிநீர் தேவை பூர்த்தி செய்யப்பட்டு வருகிறது. இதுதவிர தற்போதைய கோடை கால குடிநீர் வினியோக முன்னச்செரிக்கை நடவடிக்கையாக இவ்வாண்டில் ரூ.12.9 கோடி மதிப்பில் 372 குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக மாவட்டத்திலுள்ள 2 ஆயிரத்து 306 குக்கிராமங்களில் ஆயிரத்து 40 கிராமங்களுக்கு தினந்தோறும், 565 கிராமங்களுக்கு 2 நாட்களுக்கு ஒருமுறையும், 791 கிராமங்களுக்கு 3 நாட்களுக்க ஒருமுறையும் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.
மேலும் காவிரி கூட்டுகுடிநீர் திட்ட குடிநீர் வினியோக குழாய்களில் முறைகேடான இணைப்புகள் குழாய்களை சேதப்படுத்துதல் ஆகியவற்றை தடுத்திட ஏதுவாக சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் கூறினார். மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் கெட்சி லீமா அமாலினி, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் அனான், ஊராட்சிகளி்ன் உதவி இயக்குனர் கேசவதாசன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அண்ணாதுரை, குடிநீர் வடிகால்வாரிய உதவி செயற்பொறியாளர் சண்முகநாதன் உட்பட பலர் உடனிருந்தனர்.