ராமநாதபுரம், மார்ச்
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியர் தேவாலயத்தில் நடைபெறும் திருவிழாவில் கலந்து கொள்வதற்கு மொத்தம் 80 படகுகளில் 2 ஆயிரத்து 453 யாத்திரிகர்கள் செல்வதற்காக விண்ணப் பித்துள்ளனர் என மாவட்ட ஆட்சித் தலைவர் வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:
கச்சத்தீவில் உள்ள புனித அந்தோணியர் தேவாலயத்தில் மார்ச் 15 மற்றும் 16ம் தேதிகளில் நடைபெறும் திருவிழாவிற்கு ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து 80 படகுகளில் செல்வதற்காக 2 ஆயிரத்து 453 யாத்திரிகர்கள் விண்ணப்பித்துள்ளனர். இதில் 65 விசைப்படகுகளும் 15 நாட்டுப் படகுகளும் அடங்கும். அதன்படி மேற்குறிப்பிட்டுள்ள யாத்திரிகர்கள் பாதுகாப்பாக செல்வதற்கு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற் கொள்ளப் பட்டுள்ளது.
அனைத்து படகுகளிலும் உயிர் பாதுகாப்பு மிதவை, உயிர்பாதுகாப்பு கவசம், தீயணைப்பு கருவிகள் உள்ளிட்டவை வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மீன்வளத் துறையின் மூலம் அனைத்து படகுகளின் உறுதித்தன்மை குறித்து ஆய்வு செய்து சான்றளிக்கப்பட்டுள்ளது. காவல் துறை, வருவாய் துறை, மீன்வளத்துறை, கடலோர காவல்படை, சுங்கத்துறை, உளவுத்துறை, தமிழ்நாடு கடலோர பாதுகாப்பு குழுமம் சார்ந்த 723 அலுவலர்கள் மூலம் ஒருங்கிணைக்கப்பட்டு அனைத்து முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கச்சத்தீவு திருவிழாவிற்கு செல்லும்போது படகுகளில் கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் படகுகளில் அனுமதிக்கப்பட்ட பொருட்களை மட்டுமே கொண்டு செல்ல வேண்டும் என்பது குறித்தும் அனைத்து யாத்திரிகர்களிடமும் உரிய விளக்கமளிக்கப்பட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது,
இவ்வாறு தெரிவித்துள்ளார்.