அட்லி இயக்கத்தில் விஜய் நடிப்பில் உருவாகி வரும் ‘தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் பின்னி மில்லில் பிரம்மாண்ட அரங்குகள் அமைத்து அதிரடி சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து விஜய்யின் அறிமுக பாடலையும் படக்குழு படமாக்கியது.
இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். மேலும் விவேக், கதிர், யோகிபாபு, ஆனந்த்ராஜ், சூப்பர் சிங்கர் ஜூனியரில் மிகவும் பிரபலமான கபீஸ் பூவையார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்கள். சமீபத்தில் அரசியல்வாதி நாஞ்சில் சம்பத் இணைந்திருப்பதாக செய்திகள் வெளியானது.
தற்போது இவர்களோடு நடிகர் சௌந்தரராஜாவும் இணைந்திருக்கிறார். பல வெற்றி படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வரும் சௌந்தரராஜா, இந்த படத்திலும் முக்கிய கதாபாத்திரம் ஏற்று இருக்கிறார். சிறிய வேடம் என்றாலும் வலுவான வேடமாக இருக்கும் என்று சௌந்தரராஜா நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் விஜய்யுடன் நடிப்பது குறித்து, என் மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை என்றும் கூறியிருக்கிறார்.
ஏ.ஜி.எஸ். பிலிம்ஸ் தயாரிக்கும் ‘தளபதி 63’ படத்தில் ஜி.கே.விஷ்ணு ஒளிப்பதிவையும், ஆண்டனி எல்.ரூபன் படத்தொகுப்பையும் கவனிக்கின்றனர். படம் 2019 தீபாவளிக்கு ரிலீசாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.