பாராளுமன்ற தேர்தலில் தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி திமுக-வுடன் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. திமுக கூட்டணியில் காங்கிரஸ் (தமிழ்நாடு-9, புதுச்சேரி-1) 10 தொகுதிகளில் போட்டியிடுகிறது. சிவகங்கையைத் தவிர மற்ற தொகுதிகளுக்கான காங்கிரஸ் வேட்பாளர்கள் பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை காங்கிரஸ் வேட்பாளர்கள் திமுக தலைவர் முக ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது காங்கிரஸ் கட்சித் தலைவர் கேஎஸ் அழகிரியிடம் சிவகங்கை தொகுதிக்கு இன்னும் வேட்பாளர் ஏன் அறிவிக்கவில்லை? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்குப் பதில் அளித்த கேஎஸ் அழகிரி ‘‘ஒரு குடும்பத்தில் ஒருவருக்குத்தான் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி ஒரு கொள்கை முடிவு எடுத்துள்ளார். அதனால் இந்தியா முழுவதும் சிவகங்கை உள்பட 40 தொகுதிகளுக்கு இன்னும் வேட்பாளர் பெயர்கள் அறிவிக்கப்படவில்லை. இன்று சிவகங்கை தொகுதிக்கான வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்படும்’’ என கேஎஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
சிவகங்கை தொகுதியில் ப. சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கேஎஸ் அழகிரி இவ்வாறு தெரிவித்துள்ளார்.