மீஞ்சூர், நவ. 29 –
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூர் அடுத்த நாலூர் கம்மவார்பாளையம் பகுதியில் கனரக வாகனங்களை நிறுத்தும் சரக்கு பெட்டக முனையங்கள் இயங்கி வருகின்றது. அதனால் அச்சாலை மிகவும் பழுதடைந்து உள்ளதாக அப்பகுதிவாழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.
மேலும் கடந்த 12 வருடங்களுக்கு மேலாக அச்சாலை சீரமைக்கப்படாமல் மிகவும் பாதிப்படைந்த நிலையில் உள்ளதெனவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். அதனைத் தொடர்ந்து பலமுறை பல கட்ட போராட்டங்களை அக்கிராம மக்கள் முன்னெடுத்தும் அதுக்குறித்து உள்ளாட்சி மற்றும் மாவட்ட நிர்வாகம் அரசு துறை சார்பில் எவ்வித நடவடிக்கையையும் எடுக்கவில்லையென அப்பகுதிவாழ் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் அவர்கள் திடீரென அப்பகுதி மக்கள் காலை முதல் 50-க்கும் மேற்பட்ட கனரக வாகனங்களை சிறை பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் அரசு உடனடியாக போர்கால அடிப்படையில் நடவடிக்கை மேற் கொள்ள வேண்டும் என அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.
தகவலறிந்து நிகழ்விடத்திற்கு வந்த மீஞ்சூர் காவல் துறையினர் மறியலில் ஈடுபட்டவர்களிடம் சமாதானம் பேசி, அதிகாரிகளிடம் இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படும் என உறுதி அளித்ததைத் தொடர்ந்து மறியல் போராட்டம் கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.





















