பழவேற்காடு, நவ. 30 –
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அடுத்துள்ள பழவேற்காடு பகுதிக்குட்பட்ட தோனிரவு கிராமத்தில் நடிகர் விஜயின் மக்கள் இயக்கம் சார்பில் புதிய நூலகம் திறப்பு விழா நடைபெற்றது,
பொன்னேரி தொகுதி தலைவர் எம் சிலம்பரசன் அந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திருந்தார். தொடர்ந்து இவ்விழாவிற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று உரைநிகழ்த்தினார்.
விழாவில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற திருவள்ளூர் மாவட்ட பொறுப்பாளர் எஸ். விஜயகுமார் நூலகத்தை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். தொடர்ந்து அவர் சிறப்புரை நிகழ்த்தும் போது,
இப் பகுதியில் வசித்து வரும் அனைவரும் நம்முடைய குடும்பத்தைச் சார்ந்த சகோதர, சகோதரிகள் எனவும் நம் அனைவரின் முன்னேற்றத்திற்காக பாடு படுவதே நமது இலட்சியம் எனவும் அப்போது அவர் தெரிவித்தார். மேலும் நமது இயக்கத்தின் சார்பில் வழங்கும் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் குழந்தைகள் முதல் பெரியோர்கள் வரை வாழ்வின் முன்னேற்றத்திற்காக பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என அப்போது அறிவுறுத்தினார்.
மேலும் இன்று திறந்து வைக்கப்பட்டுள்ள இந்நூலகத்தை நல்ல முறையில் பயன்படுத்திடவும், பாதுகாத்திடவும் வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். இவ்விழாவில் மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் தோனிரவு ஸ்ரீதர், மீஞ்சூர் கிழக்கு ஒன்றிய தலைவர் சலீம், பொன்னேரி நகரத் தலைவர் கோபி உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் உள்ளிட்ட அப்பகுதி பொதுமக்கள் என திரளானவர்கள் கலந்து கொண்டனர்.






















