மயிலாடுதுறை, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
மயிலாடுதுறையில் நூற்றுக்கும் மேற்பட்ட சிறுவர்கள் படிக்கும் நகராட்சி துவக்கப்பள்ளியில் உள்ள கிணறு திடீரென ஆபத்தான முறையில் இடிந்து விழுந்துள்ளது. மேலும் அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு எதிர்வரும் காலங்களில் ஆபத்துக்களை ஏற்படுத்தும் நிலையில் உள்ளதால், உடனடியாக அதனை நகராட்சி நிர்வாகம் சீர் செய்ய பொது மக்கள் மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறை திருஇந்தளூரில் 1874 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட 150 ஆண்டுகள் பழமையான நகராட்சி துவக்கப்பள்ளி அமைந்துள்ளது. இந்த வளாகத்தில் நகராட்சி துவக்கப்பள்ளி நகராட்சி உயர்நிலைப்பள்ளி சத்துணவு கூடம் ஆகிய மூன்றும் ஒரே இடத்தில் அமைந்துள்ளது.
மூன்று பிரிவுகளிலும் 300-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். இதில் துவக்கப்பள்ளி மற்றும் சத்துணவு கூடம் அமைந்துள்ள இடத்திற்கு நேர் எதிரே நூறு அடி ஆழமுள்ள பழமையான கிணறு அமைந்துள்ளது. இந்த கிணற்றில் மாணவர்கள் நலன் கருதி, கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு கிணற்றின் மேல் புறம் கான்ங்கிரீட் கொண்டு மூடப்பட்டது. சமீபத்தில் பெய்த மழை காரணமாக வலுவிழந்த கான்கிரீட் இடிந்து விழுந்தது. இதனால் கிணறு அபாயகரமான முறையில் காணப்படுகிறது.
மூன்று வயது முதல் 10 வயது வரை சிறுவர் சிறுமியர் பயிலும் பகுதியின் மையத்தில் இந்த கிணறு காணப்படுவதால் மாணவர்கள் தவறி விழுந்தால் காப்பாற்ற முடியாத நிலைமை ஏற்படும். பள்ளிகள் ஆறாம் தேதி திறக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ள நிலையில் கிணற்றை பாதுகாப்பான முறையில் மேல்புறம் மூடுவதற்கு நகராட்சி இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. மாணவர்களின் பாதுகாப்பு கருதி உடனடியாக கிணற்றின் மேல்புறத்தில் தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.