காஞ்சிபுரம், ஆக. 20 –
காஞ்சிபுரம் அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் நடைபெற்ற போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைப்பெற்றது. அதில் பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் தாமு ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருளால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார்.
தமிழகத்தில் நாளுக்கு நாள் போதைப் பொருளினால் பல்வேறு குற்றச் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், அனைவரிடத்திலும் பெரும் வேதனையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் வளரும் இளம் சமுதாயத்தினரும், பள்ளி கல்லூரி மாணவர்களும் இந்த போதைப் பொருட்கள் குறித்த போதிய விழிப்புணர்வுகள் இல்லாததால் போதைக்கு அடிமையாகி வரும் சூழல் நிலவி வருகிறது.
இந்நிலையில் அதனை தடுக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு துறைகள் சார்பாக அனைத்து மாவட்டங்களிலும் பொதுமக்கள், இளைஞர்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக இந் நடவடிக்கைகளில் தமிழக மற்றும் மாவட்ட காவல் துறையினர் பெரும் பங்கெடுத்து பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு நடவடிக்கைகளை பாராட்டத்தக்க வகையில் நடத்தி வருகின்றனர்.
அதன் ஒரு பகுதியாக காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தனியார் மருத்துவ கல்லூரியில் பள்ளி கல்லூரி மற்றும் இளைஞர்கள் மத்தியில் இந்த போதைப் பொருளால் விளையும் தீமைகள் மற்றும் அதனை தடுத்திடவும் ஒழித்திடவும் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த விழிப்புணர்வை மாணாக்கர் மற்றும் இளைஞர்களிடையே ஏற்படுத்தும் வகையில் கருத்தரங்கு ஏற்பாட்டினை செய்து இருந்தார்கள்.
அந்நிகழ்வில் பிரபல திரைப்பட நகைச்சுவை நடிகர் தாமு சிறப்பு அழைப்பாளராக கலந்துக்கொண்டு அவர்களிடம் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு குறித்த உரைநிகழ்த்தினார்.
மேலும் இந்நிகழ்ச்சி காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.சுதாகர் தலைமையிலும், மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.ஆர்த்தி முன்னிலையிலும் நடைபெற்றது.
ஆயிரத்திற்கும் மேற்பட்ட பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் திரளான இளைஞர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர். மேலும் இந்நிகழ்வில் கலந்துக்கொண்ட அனைவரும் போதைப்பொருள் தடுப்பு மற்றும் ஒழிப்பு உறுதி மொழியேற்றனர்.
தொடர்ந்து காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை சார்பில் போதைப் பொருள் ஒழிப்பு குறித்த விழிப்புணர்வு குறும்படங்களும் திரையிடப்பட்டு அதன் மூலம் விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இந்நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றிச்செல்வி, மருத்துவக் கல்லூரி டீன், பேராசிரியர்கள், காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறை துணை காவல் கண்காணிப்பாளர்கள், ஆய்வாளர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.