பொன்னேரி. மார்ச். 24 –
திருவள்ளூர் மாவட்டம், புழல் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சென்றம்பக்கம் கிராமத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவிலான கிராம நத்தம் பொறம்போக்கு நிலம் உள்ளது. இந்த நிலத்தை அப்பகுதிவாசிகள் தங்களது கால்நடைகளை பராமரிக்கவும், திருவிழாக்களை நடத்தவும் காலம் காலமாக பயன்படுத்தி வந்தனர்.
இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் போலி ஆவணம் மூலம் அதிகாரிகள் துணையோடு அந்த கிராம நத்தம் நிலத்திற்கு போலி பட்டா பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. ஆக்கிரமிப்பு நிலத்தை கையகப்படுத்தவும், தனிநபருக்கு வழங்கப்பட்ட போலி பட்டாவை ரத்து செய்யக்கோரியும் கிராம மக்கள் சார்பில் பல முறை வட்டாட்சியர், கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், ஆட்சியர் ஆகியோருக்கு புகார் மனு அனுப்பியும் நடவடிக்கை எடுக்காததால் ஆத்திரமடைந்த கிராம மக்கள் பொன்னேரி வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டனர்
இதனை அடுத்து கிராம பிரதிநிதிகளை அழைத்து சமரச பேச்சுவார்த்தை மேற்கொண்ட வட்டாட்சியர் ரஜினிகாந்த் சர்ச்சைக்குரிய நிலம் குறித்து முறையான ஆய்வு நடத்தி ஆக்ரமிப்பு உறுதி செய்யும் பட்சத்தில் சர்ச்சைக்குரிய நிலத்தை மீட்கவும், அதற்கு வழங்கப்பட்ட பட்டாவை ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பதாக அளித்த உறுதியை தொடர்ந்து போராட்டத்தை கிராம மக்கள் தற்காலிகமாக விலக்கிக் கொண்டு கலைந்துச் சென்றனர்.




















