கும்பகோணம், டிச. 16 –
நாடு முழுவதும் வங்கிகள் தனியார் மயமாக்குதலைக் கண்டித்து இன்றும், நாளையும் இரண்டு நாட்கள் நடைப்பெறும் வங்கி ஊழியர்கள் பங்கேற்கும் வேலை நிறுத்தப் போராட்டத்தில் 10 லட்சம் வங்கி ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர். இதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் வேலை நிறுத்தம் செய்து பஞ்சாப் நேஷனல் வங்கி பிரதான கிளை முன்பு ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.
மத்தியில் ஆளும் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஒன்றிய அரசு, வங்கிகள் சீரமைப்பு என்ற பெயரில் எடுத்து வரும் மக்கள் விரோத, வங்கி ஊழியர்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், பெரு முதலாளிகளின் லாபத்திற்காக, வங்கிகளை தனியார் மயமாக்குவதை கண்டித்தும், வாராகடன்களை வசூலிக்க கடும் நடவடிக்கைகள் எடுக்க கோரியும், பெருமுதலாளிகளின் கடன்களை உடன் வசூலிக்கவும், கடன் வங்கி திரும்ப செலுத்தாத பெருமுதலாளிகளின் பட்டிலை வெளியிடவும் கோரி , நாடு தழுவிய அளவில் பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த 10 லட்சம் ஊழியர்கள் இன்றும் நாளையும் என இருநாட்களுக்கு வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக பல்வேறு வங்கி ஊழியர் அமைப்புகள் தெரிவிக்கின்றன. இதன் ஒருபகுதியாக இன்று கும்பகோணம் பஞ்சாப் நேஷனல் வங்கி பிரதான கிளை முன்பு கும்பகோணம் மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் உள்ள 50க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளை சேர்ந்த அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் என ஏராளமானோர் திரண்டு மத்தியில் ஆளும் ஒன்றிய அரசை கண்டித்து, கோரிக்கை பதாதைகளை ஏந்தி, கோரிக்கை முழக்க கண்டன ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.