சென்னை, டிச. 30 –

வீட்டுப்பாடம் செய்யவில்லை என தாய் கண்டித்ததால் 13 வயது சிறுவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை பள்ளிக்கரணை அடுத்த எஸ்.கொளத்தூர், மணிமேகலை நகர், எல்லையம்மன் கோவில் தெருவில் வசிப்பவர் சிவகுமார் (42) இவர் வெல்டிங் வேலை செய்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மகள் மற்றும் மகன் உள்ளனர்.

இவரது மகன் 13 வயதான தினேஷ் மடிப்பாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார். இந்நிலையில் தினேஷ் நேற்று பள்ளிக்குச் சென்று விட்டு வீட்டிற்கு வந்து சக நண்பர்களுடன் சேர்ந்து வெளியே சென்று விளையாடி விட்டு இரவு 9 மணிக்கு வீட்டிற்கு வந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அவரது தாய் கமலா பள்ளியில் கொடுத்த வீட்டுப் பாடங்களை எழுதாமல் நண்பர்களுடன் விளையாடி விட்டு வருகிறயா என மகன் தினேஷை கண்டித்ததாக கூறப்படுகிறது. தாய் கண்டித்ததால் மன வருத்தம் கொண்டு, தினேஷ் வீட்டின் மேல்மாடியில் உள்ள அறைக்கு சென்று கதவை பூட்டிக் கொண்டு ஊஞ்சலுக்காக கட்டி இருந்த சேலையில் தினேஷ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

திட்டியதால் கோபமடைந்து மாடிக்கு சென்ற மகன் வெகு நேரமாகியும் கீழே வராததால், தாய், தந்தை இருவரும் மேல் மாடியில் உள்ள அறைக்கு சென்று கதவை வெகு நேரமாக தட்டியும், கதவு திறக்கப்படததால், சந்தேகமடைந்த இருவரும் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்த போது, தினேஷ் ஊஞ்சலுக்காக கட்டி இருந்த சேலையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

பின்னர் தினேஷை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர். அங்கு தினேசை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்ததாக கூறப்படுகிறது.

பின்னர் சம்பவம் குறித்து பள்ளிக்கரணை காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் தினேஷ் உடலை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக குரோம்பேட்டையில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து பள்ளிக்கரணை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இச்சோக சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here