செய்தி சேகரிப்பு இசிஆர். பா.வினோத் கண்ணன்
சென்னை சோழிங்கநல்லூரில் சாலையில் நடந்து சென்ற பெண்ணிடம் மணி பர்சை பறித்து சென்ற இருவரை போலீசார் கைது செய்து, அவர்களிடமிருந்து ஒரு இருசக்கர வாகனம் 9 செல்போன்கள் போன்றவற்றை பறிமுதல் செய்தனர்.
சோழிங்கநல்லூர், செப். 12 –
சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய 8 அடுக்கு குடியிருப்பில் வசித்து வருபவர் நவீனா என்ற பெண்மணி, அவர் செம்மஞ்சேரி காவல் நிலையம் எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டு வேலை செய்து வருகிறார்.
நேற்றைய முன்தினம் சோழிங்கநல்லூர் தபால் நிலையம் அருகில் ஓஎம்ஆர் சாலை சர்வீஸ் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த போது இருசக்கர வாகனத்தில் வந்த இருவர் நவீனா கையில் வைத்திருந்த மணி பர்சை பறித்து தப்பிச் சென்றுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து அருகில் உள்ள செம்மஞ்சேரி காவல் நிலையத்தில் குற்றப் பிரிவு ஆய்வாளரிடம் புகார் அளித்துள்ளார். நவீனா கொடுத்த புகாரின் அடிப்படையில் குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையில் தலைமை காவலர்கள் திருமுருகன், புஷ்பராஜ், தாமோதரன், காவலர்கள் கண்ணன், வினோத் ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற் கொண்ட போது மணி பர்சை பறித்து சென்ற இடத்தில் உள்ள சிசிடிவி கேமராவை ஆராய்ந்து பார்த்த போது இருசக்கர வாகனத்தில் இருவர் தப்பி சென்றது பதிவாகியுள்ளது.
சிசிடிவி கேமராவில் பதிவான இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணைக் கொண்டு சென்னை கண்ணகி நகரைச் சேர்ந்த அஜய்(எ)குள்ளா(19), அஜித்குமார்(19) இருவரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
இருவரையும் காவல் நிலையத்தில் வைத்து விசாரித்த போது அஜய் சென்னை சாஸ்திரி நகர், திருவான்மியூர், துரைப்பாக்கம், கண்ணகிநகர், செம்மஞ்சேரி போன்ற காவல் நிலையங்களில் இருசக்கர வாகன திருட்டு வழிப்பறி போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டது தொடர்பாக 9 வாழக்குகள் அவர் மீது நிலுவையில் உள்ளது தெரியவந்தது.
இதே போல் அஜித்குமார் மீது சாஸ்திரி நகர், துரைபாக்கம், செம்மஞ்சேரி ஆகிய காவல் நிலையங்களில் வழிப்பறி போன்ற குற்றங்களில் ஈடுபட்டது தொடர்பாக 5 வழக்குகள் நிலுவையில் உள்ளது தெரியவந்ததாக போலீசார் தெரிவித்தனர்.
சிறுவயதில் இது போன்ற குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டு வந்தது கஞ்சா புகைப்பதற்கும், பெண்களுடன் உல்லாசமாக இருப்பதற்காகவும் என்பது போலீசார் விசாரணையில் தெரிய வந்ததாக தெரிவித்தனர்.
அவர்களிடமிருந்து ஒரு இருச்சக்கர வாகனம், 9 செல்போன்கள், புகார் அளித்த பெண்ணிடம் இருந்து பறித்துச் சென்ற மணிபர்ஸ் அடையாள அட்டைகள் உள்ளிட்டவர்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
புகார் கொடுத்த மறுநாளே குற்றவாளிகளை பிடித்த குற்றப்பிரிவு ஆய்வாளர், தலைமை காவலர்கள் திருமுருகன், புஷ்பராஜ், தாமோதரன், காவலர்கள் கண்ணன், வினோத் ஆகியோர் அடங்கிய தனிப்படையினர்க்கு காவல்துறை உயர் அதிகாரிகள் பாராட்டுக்களை தெரிவித்தனர்.