இன்று தனுஷ் என்ற மாணவர் நீட் தேர்வு அச்சத்தால் தற்கொலை செய்து கொண்டதற்காக அவரது குடும்பத்திற்கும், தமிழக மாணவர்களுக்கு நீட் தேர்வு குறித்த அச்சத்தைப் போக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசு சார்பில் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார். அவ்வறிக்கையில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் நாளை நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேறும் என்றும் நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது இருந்து தொடங்குகிறது என்றும் தெரிவித்துள்ளார்.

சென்னை, செப். 12 –

முதலமைச்சர் அறிவித்துள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் நீட் தேர்வு அச்சம் காரணமாக தனுஷ் என்ற மாணவர் தற்கொலை செய்து கொண்டுள்ள செய்தியறிந்து தான் மிகுந்த அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தாகவும், அந்த மாணவருக்கு தனது அஞ்சலியை செலுத்துகிறேன். மேலும் மாணவர் தனுஷை இழந்து வாடும் அவரது பெற்றோர்கள் மற்றும் உறவினர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.

இரண்டு முறை தேர்வு எழுதியும் தேர்ச்சி பெற முடியாத அளவுக்கு கிராமப்புற – நகரப்புற ஏழை மாணவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பை ஏற்படுத்துவதால், மனமுடைந்து தனுஷ் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

நீட் தேர்வு மாணவர்களுக்கு ஏற்படுத்தும் மிகப் பெரிய சிரமங்களைப் புரிந்து கொள்ளாத ஒன்றிய அரசின் அலட்சியமும், பிடிவாதமும் இந்தியாவின் நம்பிக்கை நட்சத்திரங்களாக வரவேண்டிய மாணவ மாணவிகள் தற்கொலைக்குக் காரணமாகத் தொடர்ந்து அமைந்து வருகிறது. நீட் தேர்வில் முறைகேடு, கேள்வித்தாள் லீக், ஆள்மாறாட்டம் உள்ளிட்ட பல்வேறு மோசடிகளும், மாணவ மாணவிகள் தற்கொலைகளும் ஒன்றிய அரசின் மனதை மாற்றவில்லை என்பது, கல்வி மாநிலப் பட்டியலுக்கு வந்தே தீர வேண்டும் என்ற அவசியத்தை மேலும் மேலும் வலுவடைய செய்கிறது.

இந்நிலையில் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு நீட் தேர்வுக்கு எதிரான நமது சட்டப் போராட்டம் இப்போது தொடங்குகிறது. நாளை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நீட் தேர்வில் இருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற இருக்கிறது. இதனை இந்தியத் துணைக்கண்டத்தின் பிரச்சினையாக கருதி அனைத்து மாநில முதலமைச்சர்களின் கவனத்துக்கும் கொண்டு சென்று ஆதரவுத் திரட்டி வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.

மாணவச் செல்வங்கள் மனம் தளர வேண்டாம் சிறந்த எதிர்காலத்தை உங்களுக்கு அமைத்து தரும் பெரும் பொருப்பும் , கடமையும் இந்த அரசுக்கு இருக்கிறது. அந்தப் பொறுப்பினை உணர்ந்து நீட் தேர்வை ஒன்றிய அரசு நீக்கும் வரை நமது சட்டப் போராட்டம் தொடரும் என அச் செய்திக் குறிப்பில் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.

மேலும் இதுப் போன்ற விபரீத முடிவுகளை மாணக்கர்கள் எடுக்க வேண்டாம் என்று  அவர் அன்புடன் கேட்டுக் கொண்டுள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here