கிளாம்பாக்கம், டிச. 30 –

இன்று கிளாம்பாக்கத்தில் சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தின் சார்பில் ரூ. 393.74 கோடி மதிப்பீட்டில் இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து முனையங்களில் ஒன்றாக கட்டி முடிக்கப்பட்ட கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் திறப்பு விழா நடைப்பெற்றது. அதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைத்தார்.

சென்னையை அடுத்துள்ள செங்கல்பட்டு மாவட்டத்திற்குட்பட்ட கிளாம்பாக்கத்தில் வீட்டு வசதிக்குழுமத்தின் சார்பில் சுமார் 88.52 ஏக்கர் பரப்பளவில் சுமார் ரூ.393.73 கோடி பொருட் செலவில் இந்தியாவின் மிகப் பெரிய பேருந்து முனையங்களில் ஒன்றாக கட்டி முடிக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தையும் அதனுள் அமைக்கப்பட்டுள்ள முன்னாள் முதலமைச்சர் மறைந்த கலைஞரின் திருவுருவச் சிலையையும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

சென்னை, கோயம்பேடு மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் நோக்கிலும், மேலும் தெற்கு நோக்கி செல்லும் பேருந்துகளுக்காக செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரை அடுத்துள்ள கிளாம்பாக்கத்தில் சுமார் 88.52 ஏக்கர் பரப்பளவில் அனைத்து விதமான வசதிகளுடன் கூடிய புதிய புறநகர் பேருந்து முனைய கட்டுமானம் அமைத்திட தமிழ்நாடு அரசால் அறிவிப்பு வெளியிடப்பட்டு, அதற்காக அந்நிலம் சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமத்திற்கு மாற்றப்பட்டு, கட்டுமானம் தொடர்பான அனைத்துப் பணிகளையும் தொடங்கி நிறைவுப் பெற்றதைத் தொடர்ந்து அதன் திறப்பு விழா இன்று கிளாம்பாக்கத்தில் நடைப்பெற்றது.அதனை மக்கள் பயன்பாட்டிற்காக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.

பேருந்து முனையத்தின் அமைப்பு மற்றும் பயணிகளுக்கான வசதிகள்

 

கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் சுமார் 6 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளது. அதில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் ( SETC ) மற்றும் தமிழ்நாடு மாநிலப் போக்குவரத்துக் கழகப் பேருந்துகளுக்கு ( TNSTC ) 8 தொகுதிகளைக் கொண்ட 215 பேருந்து பாந்துகளும், இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களுக்கு இரண்டடுக்கு அடித்தள நிறுத்துமிட வசதியும் அதில் உள்ளது.

சென்னையிலிருந்து, கிளாம்பாக்கம் வரை மாநகரப் பேருந்து கழகப் பேருந்துகளை இயக்குவதற்காக சுமார் 7 ஏக்கர் பரப்பளவில் 60 பேருந்துகள் நிறுத்தும் வசதியுடன் மாநகரப் பேருந்துக் கழக முனையம், ஜி.எஸ்.டி சாலைச்சார்ந்து அதில் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் மாநகரப் பேருந்துக் கழக முனையத்திலிருந்து பிரதான முனையத்திற்கு செல்லும் பயணிகளுக்கு வசதியாக இயங்குபடிகள் மற்றும் மின்தூக்கிகளுடன் கூடிய சுரங்கப்பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.

இப்பேருந்து முனையத்தில் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மற்றும் அரசு போக்குவரத்துக் கழக பேருந்துகளின் முனையக் கட்ட டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு குறைந்தளவு உயரம் கொண்ட பயணச்சீட்டு பெறுமிடங்கள், தொடு உணர் தரைப்பகுதி, மின்கலன் மூலம் இயக்கப்படும் கார்கள், சக்கர நாற்காலிகள் மற்றும் தனி கழிவறைகள் போன்ற வசதிகளும் அப்பேருந்து முனையத்தில் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டிட அறைகள், தரை தளத்தில் 53 கடைகள் மற்றும் 2 உணவகங்கள் துரித உணவு மையம் மற்றும் முதல் தளத்தில் 47 கடைகள் மற்றும் 2 உணவகங்கள் துரித உணவு மையம்,ஏடிஎம் வசதி, தனி மருத்துவமனை மற்றும் இலவச மருத்துவமையம் போக்குவரத்து அலுவலகம், நேரக் குறிப்பாளர் அலுவலகம், ஆண்கள் மற்றும் பெண்கள், திருநங்கைகளுக்கான கழிவறைகள்,குடிநீர் வசதி, மின் விசிறிகள்,இருக்கைகள், சூழல் வரைப்படங்கள் உள்ளிட்ட பல்வேறு வசதியுடன் கூடிய பேருந்து நிறுத்துமிட அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

மேலும் அம்முனையத்தில் பயணிகளுக்காக 100 ஆண்கள், 40 பெண்கள் மற்றும் 340 ஓட்டுநர்களுக்கான படுக்கை வசதி கொண்ட ஓய்வறைகள் கொண்ட வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. அத்துடன் 2 நகரும் படிக்கட்டுகள் பயணிகளுக்கான 8 மின்தூக்கிகள் மற்றும் 2 சரக்குகளை ஏற்றி இறக்குவதற்கான மின் தூக்கிகளும் அதில் உள்ளது. மேலும் இரண்டு        அடித்தளங்களில் சுமார் 2,769 இரு சக்கர வாகனங்கள் மற்றும் 324 இலகு ரக வாகன நிறுத்தும் வசதிகளும் மற்றும் நீர் வழங்கல், மின்சாரம் மற்றும் தீயணைப்பு, அடித்தள காற்றோட்டம், முக அடையாளம் காட்டும் கேமராக்கள் போன்றவற்றின் ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்பு முறைக் கொண்ட பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளது.

அதனைத்தொடர்ந்து, 11 KV / 433 V  மின்மாற்றும் திறன் கொண்ட 2000 KVA   மின் மாற்றிகள் மற்றும் மின் ஆக்கிகளுடன் ( ஜெனரேட்டர் ) கூடிய துணை மின் நிலையம் மற்றும் இதர மின் கட்டமைப்பு வசதிகள், 9 கழிவறை தொகுதிகளை தூய்மையாக்கவும், செடிகளுக்கு நீர் பாய்ச்சவும் சுத்திகரிக்கப்பட்டு மீண்டும் பயன்படுத்தக் கூடிய வகையில் நாளொன்றுக்கு 650 கி.லி. கொள்ள ளவுள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையமும் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் அப் பேருந்து முனையத்தின் தரை சுத்தம் செய்ய 5 இயந்திரங்கள், ஒரு இயந்திர துடைப்பான் மூலம் நாள்தோறும் சுத்தமாக பராமரிக்கவும் துரித ஏற்பாடுகளையும் செய்துள்ளனர்.

மேலும் பேருந்து முனையக் கட்டுமானப் பணிகள் அல்லாது ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகள் வெளியே செல்வதற்கு பிரத்யேக சாலை விரிவாக்க வசதி மற்றும்பேருந்துமுனையத்தின் முன்புறம் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணிகளும் செய்யப்பட்டுள்ளது.

அப்பேருந்து முனையத்தில் பயணிகளின் குடிநீர் வசதிக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நாளொன்றுக்கு 0.5 மில்லியன் லிட்டருடன் கூடிய நிலத்தடி நீரை சுத்திகரிக்கும் 300 கிலோ லிட்டர் கொள்ளளவுள்ள எதிர் சவ்வூடு பரவல் ( ஆர்.ஓ ) முறையிலான நீர் சுத்திகரிப்பு நிலையமும், மேலும் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மற்றும் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்துக் கழகம் மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் செயல்பாட்டிற்காக தனியாக பேருந்து பராமரிப்புப் பணிமனை மற்றும் பராமரிப்பிடங்கள் மேலும் எரிபொருள் நிரப்பும் நிலையங்களென பயணிகள் பேருந்தில் வசதியுடனும் பாதுகாப்புடனும் செல்வதற்கான அனைத்து உள் கட்டமைப்புகளையும் அப் பேருந்து முனையத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.

குறிப்பாக மூத்த  குடிமக்கள், நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டு வசதிகளுக்காக 5 எண்ணிக்கையிலான மின்கல ஊர்தி வசதிகளும் செய்யப்பட்டுள்ளது. மேலும் அப்பேருந்து முனையத்தின் அழகை மெருகேற்றும் வகையில் 6 ஏக்கர் நிலப்பரப்பில் நீருற்றகளுடைய நடைப்பாதைகள் கொண்ட பூங்கா, பயணிகளின் அவசர மருத்துவச் சிகிச்சைகளுக்காக இலவச மையம் அமைக்கப்பட்டுள்ளதுடன், முனையத்தின் முகப்பில் ஆட்டோ, டாக்சி நிறுத்த த்திற்காக தனியிடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து இப்பேருந்து முனையத்திற்காக புதிதாக பிரத்யேகமான ஒரு புதிய புறநகர் இரயில் நிலையம் அமைத்திடவும், அதிலிருந்து பேருந்து முனையத்தை இணைக்கும் வகையில் ஆகாய நடைப்பாதை( ஸ்கைவாக் )  வாயிலாக இணைப்பதற்கான ஆரம்பக்கட்ட பணிகள் தொடங்கப்பட்டுள்ளதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புறநகர் பேருந்து முனையம், இந்திய தொல்லியல் துறை நிலங்களுக்கு அருகாமையில் அமைந்துள்ளதால் 16 ஏக்கர் நிலப்பரப்பில் தொல்லியல் அறிவுசார் மையம் மற்றும் காலநிலைப் பூங்கா நடைப்பாதை, விளையாட்டு மைதானம் மற்றும் பொழுதுப் போக்கு அம்சங்கள் நிறைந்த பூங்கா அமைக்கும் பணியும் நடைப்பெற்று வருவதாக அரசு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அப்பேருந்து முனையத்தில் புதியதாக காவல் நிலையம், அந்தமுனையத்திலிருந்து சுமார் 7 கி.மீ தொலைவில் அமைந்துள்ள சென்னை வெளிவட்டச் சாலை முடிச்சூர் வரதராஜபுரம் பகுதியில் சுமார் 5 ஏக்கர் நிலப்பரப்பில் அனைத்துக் கட்டமைப்பு வசதிகளுடன் ஆம்னி பேருந்து நிறுத்துமிடமும் அமைக்கும் பணி நடைப்பெற்று வருவதாக அரச தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வின் போது முதலமைச்சர் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை மக்கள் பயன்பட்டிற்கு திறந்து வைத்து, பேருந்து சேவைகளை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து அப்பேஉந்து முனையத்தில் ஆவின் பாலகம் அமைப்பதற்கான அனுமதி ஆணையினை மாற்றுத்திறனாளி ஒருவருக்கு வழங்கி தொடர்ந்து கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் சிறப்பினை விளக்கிடும் காணொலிக் காட்சியினைப் பார்வையிட்டார்.

மேலும் இந்நிகழ்ச்சியில் குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், போக்குவரத்து துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சரும், சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் ஆர். பிரியா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் டி.ஆர் பாலு, க.செல்வம், சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், தாயகம் கவி, இ.கருணாநிதி, எஸ்.ஆர்.ராஜா, அ.வெற்றியழகன், எஸ்.எஸ்.பாலாஜி, ஜோசப் சாமுவேல், எஸ். சுதர்சனம், இதயவர்மன், தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தாகுமாரி, துணை மேயர் ஜி.காமராஜ், போக்குவரத்துத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் க.பணீந்திர ரெட்டி, வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளர் சி.சமயமூர்த்தி, சென்னை பெருநகர் வளர்ச்சிக்குழுமத்தின் உறுப்பினர் செயலர் அன்சுல் மிஸ்ரா, செங்கல்பட்டு ஆட்சித்தலைவர் ஆ.ர.ராகுல்நாத், தமிழ்நாடு பாடநூல் கழகத்தலைவர் திண்டுக்கல் ஐ.லியோனி, உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உள்ளிட்வர்கள் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here