திருவண்ணாமலை, டிச. 4 –
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள சாத்தனூர் அணையில் மாலை நேரத்தில் வரும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தேசியக்கொடி வண்ணத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டு 10 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது மீண்டும்பிரகாசிக்கிறது.
திருவண்ணாமலை மாவட்டத்திலேயே மிகவும் பிரசித்தி பெற்ற சுற்றுலாத்தலமாக விளங்குவது சாத்தனூர் அணையாகும். பொங்கல் தீபாவளி விடுமுறை தினங்களில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தங்கள் குடும்பத்தினருடன் வந்து ஆதாம் ஏவாள் பூங்கா, ராக்கெட் பார்க், காந்தி மண்டபம், வீரமங்கை பார்க், கலர் மீன் கண்காட்சி, தொங்கு பாலம், முதலைப் பண்ணை, டைனோசர் பார்க், மற்றும் தாஜ்மஹால் பகுதிகளை சுற்றிப் பார்த்து தங்கள் பொழுதை புத்துணர்ச்சி ஏற்படும் வகையில் அவ்வழகை ரசித்து வருகின்றனர்.
தற்போது பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால் சாத்தனூர் அணைக்கு வினாடிக்கு 1,580 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் 119 அடி உயரம் கொண்ட சாத்தனூர் அணையில் தற்போது 117 அடியாக நீர்மட்டம் உள்ளது. நீர் மின்சாரம் தயாரிக்கக் கூடிய வழியாக ஆயிரம் கன அடி தண்ணீரும் 9 கண் மதகு வழியாக 1100 கன அடி தண்ணீரும் தென்பெண்ணை ஆற்றில் திறந்துவிடப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இவ்வணைக்கு மாலை நேரங்களில் வரும் சுற்றுலாப் பயணிகளை கவருவதற்காக பொதுப்பணித் துறை மூலம் சாத்தனூர் அணையின் 9 கண் மதகு பகுதியில் தேசியக் கொடி வண்ணத்தில் மின்விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது.
அணை பூங்கா பகுதியில் இந்த மின்விளக்குகள் ரம்மியமாக காட்சி அளிக்கிறது. ஏற்கனவே கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு இதேபோல் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டு பின்னர் பழுதடைந்துள்ளது. தற்போது மீண்டும் வண்ண மின் விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளதால் சாத்தனூருக்கு இனிவரும் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் மாலை நேரங்களிலும் அணையை சுற்றிப் பார்க்க வருவார்கள் என்று பொதுப்பணித்துறை ஊழியர்கள் எதிர்பார்க்கின்றனர்.