திருவள்ளூர் செப் 23 :

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத்துறை சார்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கான வயிற்றுப் போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இந்த முகாமிற்கு திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கி குழந்தைகளுக்கு ஓ.ஆர்.எஸ்.உப்பு சர்க்கரை கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகளை வழங்கி முகாமை நேரடியாக பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பேசினார்.

திருவள்ளூர் மாவட்டத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் வருகின்ற 30-ந்தேதி வரை 2 வாரங்களுக்கு நடைபெற உள்ளது. இந்த முகாமில் 5 வயது வரை உள்ள 2 லட்சத்து 46 ஆயிரத்து 563 குழந்தைகளுக்கு வயிற்றுப் போக்கினால் ஏற்படும் நீரிழப்பை தடுக்கும் பொருட்டு உப்புச் சர்க்கரை கரைசல் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்கப் படுகிறது.

அனைத்து அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களிலும் இரண்டு வார காலத்திற்கு 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு வயிற்றுப்போக்கு மற்றும் காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு முகாம் நடைபெறும். இம் முகாம்களில் 1,741 அங்கன்வாடி பணியாளர்கள், சுகாதாரத்துறையை சேர்ந்த 632 பணியாளர்கள் என மொத்தம் 2 ஆயிரத்து 373 பணியாளர்கள் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள 5 வயதுக்கு உட்பட்ட குழந்தைகளின் தாய்மார்கள் இந்த முகாமை முழுமையாக பயன்படுத்த கேட்டுக்கொள்ளப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் ஜவஹர் லால், கடம்பத்தூர் முதல்நிலை ஊராட்சி மன்ற தலைவர் தமிழ்செல்வி ரமேஷ் மற்றும் சுகாதாரத்துறையை சேர்ந்த பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here