கும்பகோணம், ஏப். 06 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்..
கும்பகோணத்தில் இந்தியா கூட்டணியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டும் வேட்பாளர் சுதாவை ஆதரித்து காந்தி பூங்கா அருகில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அப்போது உரை நிகழ்த்திய அவர் வரும் ஏப்ரல் 19ம் தேதி நமது வேட்பாளர் சுதாவுக்கு கை சின்னத்துல நீங்க போடுறீங்களே ஓட்டு. அது தான் பிரதமர் மோடிக்கு வைக்கும் வேட்டு எனவும்,
மேலும் கடந்த 2019 ல் 39 தொகுதியில் பெரிய வெற்றி கொடுத்தீங்க. இந்த முறை 40 தொகுதியிலும் நாம் வெற்றி பெற வேண்டும் எனவும் மேலும் 2019ல் பாராளுமன்ற தேர்தலில் இத்தொகுதி வேட்பாளர் ராமலிங்கத்துக்கு பிரச்சாரம் செய்தேன். அவரை கிட்டத்தட்ட 2 லட்சத்து 62 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றி தந்தீர்கள். அதற்கு தனது முதற்கண் நன்றி தெரிவித்துக்கொள்கின்றேன்.
இந்த சட்டமன்ற தொகுதியில் கடந்த 2021ல் பிரச்சாரம் செய்தேன் அப்போது 22,400 வாக்குகள் வித்தியாசத்தில் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகனை, வெற்றி பெற செய்தீர்கள் அதற்கும் நன்றி.
இந்த கும்பகோணம் சட்டமன்ற தொகுதியில் கடந்த மூன்று ஆண்டுகளில் செய்துள்ள சில பணிகளை மட்டும் குறிப்பிடுகிறேன். கும்பகோணத்தில் ரூபாய் 700 கோடி மதிப்பீட்டில் நவீன வணிக வளாகங்கள் சாலை பணிகள் பாதாள சாக்கடை குடிநீர் பணிகள் மழைநீர் வடிகால்கள் பூங்காக்கள் மேம்பாட்டு பணிகள் உள்ளிட்டவை நடைபெற்றுள்ளது.
மேலும் ரூ.81 கோடியே 41 லட்ச மதிப்பீட்டில் கிராமப்புற பகுதிக்கு சாலை வசதி குடிநீர் வசதி அங்கன்வாடி கட்டிடங்கள் சமுதாய கூட பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், மேலும் விரைவில் அப்பணிகள் முடிக்கப்பட்டு பொது மக்களின் பயன்பாட்டிற்கு வர உள்ளது எனதெ தெரிவித்தார்.
அதேபோல் ரூ.212 கோடி மதிப்பீட்டில் காவிரி மற்றும் கிளை ஆறுகளை புணரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. ரூபாய் 400 கோடியே 8 லட்சம் மதிப்பீட்டில் கும்பகோணம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாலை மற்றும் பாலங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதாக தெரிவித்தார்.
இதெல்லாம் பல சாதனைகளில் ஒரு சில குறிப்பிட்ட சாதனைகளை உங்களிடம் குறிப்பிட்டுள்ளேன். அதேபோல சட்டமன்ற தொகுதிக்கான வாக்குறுதிகளை கூறுகிறேன். கும்பகோணம் அரசு கல்லூரி அருகே நவீன விளையாட்டு அரங்கம் ஏற்படுத்தப்படும் கும்பகோணத்தில் தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைக்க முதலமைச்சர் நடவடிக்கை மேற்கொள்வார். என்பதை சொல்லிக் கொள்கிறேன்.
டெல்டா விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்த நவீன அரிசி ஆலை ஏற்படுத்தப்படும் கைத்தறி பட்டு உற்பத்தியை மேம்படுத்தும் வகையில் கைத்தறி பொருட்களுக்கு ஜிஎஸ்டி வரி விலக்களிப்பதுடன் பட்டு மற்றும் ஜவுளி பூங்கா மற்றும் ஜவுளி சந்தைகள் அமைத்து தரப்படும் மகாமக திருவிழாவை தேசிய விழாவாக அறிவிக்கப்படும் எனவும். மேலும் கும்பகோணத்தை ஸ்மார்ட் சிட்டியாக மாற்றி தரம் உயர்த்தப்படும்.
மகாமக திருவிழா நாட்களில் போக்குவரத்து நெரிசலை தவிர்க்க அண்ணலக்ரஹாரம் தாராசுரம் மற்றும் பாபநாசத்தில் ரயில்வே மேம்பாலங்கள் அமைத்து தரப்படும் தஞ்சாவூர் விழுப்புரம் வரையிலான ரயில் பாதை இரட்டை வழி பாதையாக மாற்றப்பட்டு சென்னைக்கு பகல் நேர ரயில் சேவை ஏற்படுத்தப்படும் சுவாமிமலை நாச்சியார் கோவில் பகுதிகளில் புறவழிச்சாலை அமைத்து தரப்படும் இதெல்லாம் முதலமைச்சர் சொல்லி உள்ள வாக்குறுதிகள். என அமைச்சர் உதயநிதி தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் பேசுகையில் கடந்த 2014ல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.450 இருந்தது. தற்போது ரூ.1200 உள்ளது. இந்த விலையை அறிவித்தது மத்திய அரசு. தற்போது தேர்தலுக்காக ரூபாய் 100 குறைத்து தேர்தல் நாடகத்தை மோடி அரங்கேற்றி உள்ளார். அதனை கேட்டு யாரும் ஏமாந்து விடாதீர்கள் பொய் சொல்பவர்களே வாயால் வடை சுடுகிறார்கள் என்பார்கள் ஆனால் மோடி வாயில் வடை சுட்டு மற்றவர்களுக்கு கொடுக்காமல் அதையும் அவரே சாப்பிட்டு விடுவார் என்றார்.
தற்போது முதலமைச்சர் இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு தரப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார். அதுபோல் பெட்ரோல் விலை 75க்கும் டீசல் விலை 65 கும் லிட்டர் ஒன்றுக்கு கொடுப்பதாகவும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சுங்கச்சாவடிகளும் அகற்றப்படும் என வாக்குறுதி அளித்துள்ளார்.
தவழ்ந்து போய் காலில் விழுந்து முதலமைச்சரானவர் எடப்பாடி பழனிச்சாமிதான் பதவிக்கு வர வேண்டும் என்று எந்த எல்லைக்கும் போகக்கூடிய வெட்கம் கெட்ட மானம் கெட்ட சூடு சொரணை அற்ற ஒரு தலைவர் என்றால் அது எடப்பாடி பழனிச்சாமி மட்டும்தான் முதலமைச்சர் அவருக்கு செல்ல பெயர் ஒன்று வைத்துள்ளார் இனி அவர் எடப்பாடி பழனிச்சாமி இல்லை பாதம் தாங்கி பழனிச்சாமிதான் எல்லோருடைய பாதத்தையும் அவர் தொட்டு விடுவார் பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்ட போது உதயநிதி நீங்கள் தவழ்ந்து போன போட்டோவை காட்டுகிறார். அதற்கு உங்களுடைய பதில் என்ன என்று கேட்டதற்கு ஆம் இதில் என்ன தப்பு உள்ளது என அவர் கேள்விக்கேட்கின்றார்.
நான் தவழ்ந்துதான் போனேன் அவர் என்ன மூணாவது மனுஷியா அவர் காலில் விழுந்தது என்ன தவறு என்று கேட்டுள்ளார். சசிகலா காலில் விழுந்து அவரை வாரிவிட்டு கவிழ்த்து விட்டவர்தான் பாதம் தாங்கி பழனிச்சாமி சசிகலாவிற்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ்நாட்டிற்கும் பழனிச்சாமி துரோகம் செய்துள்ளார். அவர் முதலமைச்சராக இருந்த நான்கு வருடங்களில் தமிழ்நாட்டின் அனைத்து உரிமைகளையும் மத்திய பாஜக அரசிற்கு அடகு வைத்துவிட்டு இன்றைக்கு தேர்தல் நாடகமாடுகிறார் என்ற அவர், மேலும் தற்போது எங்களுக்கும் பாஜகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்கிறார்.
கொரோனா காலத்தில் மோடி அரசு ஆறு மாதங்கள் அனைவரையும் வீட்டிற்கு அடைத்து சித்தரவதை செய்தார்கள் அதற்கு ஏதாவது நிவாரணம் வழங்கினார்களா அதற்கு பதிலாக வீட்டில் விளக்கு ஏற்ற சொல்லி கொரோனாவை விரட்டுங்கள் என்று சொன்னது மோடி அரசு ஆனால் நமது முதலமைச்சர் மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கண்டிப்பாக அனைவரும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் முதல் ஆளாக அந்த தடுப்பூசியை போட்டுக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சம் வராமல் ஏற்படுத்தினார்.
கோவையில் கொரோனா நோயாளிகளை நேரில் சென்று பார்த்து தரமான மருந்துகள் கொடுக்கப்படுகிறதா என்று ஆய்வு செய்த இந்தியாவிலேயே தைரியமான ஒரே முதல்வர் நமது முதல்வர்தான். மேலும் முதலமைச்சரானதும் மகளிருக்கான கட்டணமில்லா பேருந்து பயண திட்டத்திற்கு கையெழுத்திட்டார். அதன் வாயிலாக மகளிர் மாதாமாதம் ரூ.900 வரை சேமிக்கின்றனர். இந்த மூன்று ஆண்டுகளில் மகளிர் கட்டணமில்லா 460 கோடி பயணங்கள் மேற்கொண்டு பயனடைந்துள்ளனர். என்று தெரிவித்தார்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 13 கோடியே 5000 பயணங்களை மேற்கொண்டு இருக்கிறீங்க. அதேபோல் புதுமைபெண் திட்டம். இத்திட்டத்தின் மூலம் தமிழகத்தில் 3 லட்சம் கல்லூரி மாணவிகள் மாதம் ரூ.ஆயிரம் பெறுகின்றனர்.இதில், தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 10 ஆயிரம் மாணவிகள் பயனடைகின்றனர். ஒட்டுமொத்த இந்தியாவில் மேற்படிப்பு முடித்துவிட்டு வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதம் 27 சதவீதம் மட்டுமே. தமிழகத்தில் படித்து முடித்து விட்டு வேலைக்கு செல்லும் பெண்களின் சதவீதம் 54 ஆகும். அதனை செய்து காட்டியவர் கலைஞர் என்றார்.
இப்போ செய்து கொண்டு இருப்பது நம் கழக தலைவர். இந்தியாவிலேயே முதல் முதலாக தமிழகத்தில்தான் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப் பட்டுள்ளது. 31 ஆயிரம் அரசு பள்ளிகளில் படிக்கக்கூடிய ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கக் கூடிய 18 லட்சம் குழந்தைகள் இந்த திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனர்.
தற்போது அத்திட்டத்தை பார்த்து கர்நாடகா, தெலுங்கானா மாநிலங்களிலும் இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் இத்திட்டத்தை பார்த்து கனடா நாட்டிலும் அந்நாட்டு பிரதமர் இதை நடைமுறைப்படுத்தி உள்ளார். இந்தியா மட்டுமல்லாமல், உலக நாடுகளுக்கும் திராவிட மாடல் அரசு முன்மாதிரியாக உள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் தினந்தோறும் 62,000 மாணவர்கள் காலை உணவு திட்டத்தால் பயனடைந்து வருகின்றனர். கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் தமிழகத்தில் 1.16 கோடி பெண்கள் பயனடைகின்றனர். தஞ்சை மாவட்டத்தில் மட்டும் இதுவரை இத்திட்டத்தில் 4.22 லட்சம் மகளிர் பயன்பெற்று வருகின்றனர்.
இதில் விடுபட்டவர்களுக்கு நான்கு, ஐந்து மாதங்களில் முழுவதுமாக வழங்கப்படும். எடப்பாடி பழனிச்சாமி குழந்தையே பிறக்கவில்லை அதற்குள் பெயர் வைக்க வேண்டுமா என்று கேட்கின்றார். நாங்கள் என்ன சொல்கிறோம் என்றால், யார் பிரதமராக வரவேண்டும் என்பதை விட யார் வரக்கூடாது என்பதில் திமுகவும், தமிழ்நாட்டு மக்களும் உறுதியாக உள்ளனர்.
போன முறை கோ பேக் மோடி என்று சொன்னோம். இப்போது கெட் அவுட் மோடி என்று சொல்ல போகிறோம். எங்களுக்கு குழந்தை பிறக்கவில்லை. அதனால் பெயர் வைக்கவில்லை. ஆனால் பாதம் தாங்கி பழனிச்சாமி அவர்களே உங்களுக்கு இன்னும் கல்யாணமே ஆகவில்லை. நான் கேட்கிறேன், உங்களுடைய பிரதமர் வேட்பாளர் யார்? அப்படி என்றால் எடப்பாடி பழனிச்சாமி அவர்களே நீங்கள் பிரதமரா? அவர் முதல்வர் ஆவதற்கே டேபிள் உள்ளே புகுந்து போனார். பிரதமராக ஆக வேண்டும் என்றால் என்னவெல்லாம் செய்வார் என்று யோசித்து பாருங்கள். எந்த எல்லைக்கும் போவார். நான் தற்போது என்ன திட்டங்கள் செய்துள்ளோம், செய்யப் போகிறோம் என்பதை சொல்லி உள்ளேன். ஆனால் கடந்த 10 ஆண்டுகளில் மோடி எத்தனை முறை தமிழ்நாட்டு மக்களை பார்த்துள்ளார். தேர்தல் நேரத்தில் மட்டும்தான் வருவார். காஜா புயல், மிக்ஜாம் புயல் காலகட்டத்தில் வந்தாரா? புயலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு முதலமைச்சர் 6000 வரை நிவாரணம் வழங்கினார். இதுவரை 37 ஆயிரம் கோடி நிவாரணம் ஒன்றிய அரசிடம் கேட்டுக்கொண்டிருக்கிறோம். ஆனால் ஒன்றிய அரசு ஒரு பைசா கூட வழங்கவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் கடந்த 2019ம் ஆண்டு தேர்தல் நேரத்தில் மோடியும், எடப்பாடி பழனிச்சாமியும் ஒன்றிய அரசின் திட்டத்தை கொண்டு வருகிறோம் என்று எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அடிக்கல் நாட்டி சென்றனர். ஆனால் மூன்று வருடங்கள் கழித்து நான் சென்று பார்த்த போது ஒரே ஒரு கல் மட்டும் தான் இருந்தது. இந்த ஒரு கல்லை வைத்துக்கொண்டு எய்ம்ஸ் மருத்துவமனையை தமிழ்நாட்டிற்கு கொண்டு வந்து விட்டோம் என்று இரண்டு பேரும் சொல்லி இதுவரை ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. ஆனால் நமது முதலமைச்சர் தேர்தல் அறிக்கையில் சொன்னபடி சென்னை சைதாப்பேட்டையில் கலைஞர் நூற்றாண்டு சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஹாஸ்பிடலில் ஒரு ஆண்டிற்குள் முடிப்பதாக சொல்லி பத்து மாதத்தில் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார். இதுதான் திராவிட மாடல் அரசுக்கும், மத்திய பாஜக அரசிற்கும் உள்ள வித்தியாசம். இனி ஒன்றிய பிரதமரை மிஸ்டர் 29 பைசா என்று தான் அழைக்க வேண்டும். இதுவே செல்லா காசு தான். ஜூன் 4ம் தேதிக்கு பின்னர் அவரும் அப்படிதான்.
நாம் ஜிஎஸ்டி வரி கட்டுறோம். ஒன்றிய அரசுக்கு ஒரு ரூபா கட்றோம். நாம ஒரு ரூபா கட்ட நமக்கு திருப்பி எவ்வளவு தெரியுமா. 29 பைசா தான் தருகிறார். பீகாரில் ரூ.1க்கு ரூ.7 கொடுக்கிறார். உத்தரபிரதேசத்தில் ரூ.3 திருப்பி கொடுக்கிறார். எங்களுக்கு நீட் தேர்வு வேணாம். நீட் தேர்வினால் குடும்பங்களையோ இழந்துள்ளோம் சகோதரர் ராகுல் காந்தி காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்து செய்வோம் என வாக்குறுதி அளித்துள்ளார். இதெல்லாம் நடக்க வேண்டும் என்றால் ஏப்ரல் 19ம் தேதி வாக்குச்சாவடியில் கை சின்னத்திற்கு வாக்களித்து வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்



















