கோப்புப் படம்
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தண்டராம்பட்டு வட்டம் ரோடு பாளையம் கிராமத்தைச் சேர்ந்த டி.ஏழுமலை தலைமையில் கிராம பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷிடம் நேற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் தண்டராம்பட்டு வட்டம் ரோடு பாளையம் கிராம பகுதியில் கடந்த சில ஆண்டுகளாக கருப்பு கல் குவாரி இயங்கி வந்தது. அதிகப்படியான ஆழம் தோண்டி எடுத்த காரணத்தினால் அந்த குவாரி செயல்படாமல் இருந்து வந்தது.
இந் நிலையில் கடந்த 3ந் தேதி எங்கள் பகுதியில் மீண்டும் குவாரி இயங்க தொடங்கியுள்ளது. இதனால் குவாரி வெட்டியெடுக்கப்பட்ட கற்களில் தேவையில்லாத கழிவுகள் அனைத்தும் குவாரியை சுற்றிலும் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. மேலும் அருகிலிருக்கும் ஏரியை ஒட்டிய பகுதிகளிலும் குவித்து வைக்கப்பட்டுள்ளன. குவாரியில் சுமார் 120 முதல் 150 அடி ஆழத்திற்கு தண்ணி தேங்கும் நிலை உள்ளது. இதனால் எவ்வளவு மழை பெய்தாலும் அருகிலிருக்கும் ஏரியில் சிறிதளவு நீர்மட்டுமே தேங்கும் நிலை உள்ளது. இதனால் குவாரியில் நீர்மட்டம் கீழே சென்றுவிட்டால் அருகிலுள்ள 30 முதல் 40 விவசாய கிணறுகளுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
குவாரி அருகிலுள்ள ஆழ்குழாய் கிணற்றிலிருந்து பெறப்படும் நீர் மூலம்தான் தண்டராம்பட்டு பகுதி குடியிருப்புகளுக்கு நீர்விநியோகம் செய்யப்படுகிறது. மேலும் அருகில் உள்ள ஏரியும் அதைச் சுற்றி வனக்காப்புக்காடும் உள்ளன. குவாரியை சுற்றியுள்ள சுமார் 200 ஏக்கர் நிலங்களுக்கு நீராதாரமான கிணறுகளின் ஊற்றுகள் குவாரியில் உள்ள ஆழம் காரணமாக மழைநீர் அனைத்தும் குவாரிக்கு சென்று 50 அடி ஆழத்திற்கு கீழ் தேங்கிவிடுவதால் சுற்றுப்புற விவசாய கிணறுகள் அனைத்திலும் நீர் குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டுவந்த குவாரியின் மூலம் அரசாங்கம் அனுமதித்ததைவிட அதிகமான அளவில் கருப்பு கற்கள் வெட்டிஎடுக்கப்பட்டுள்ளதற்கு இந்த அளவீடுகள் நிரூபிக்கும். கடந்த 2019ம் ஆண்டு தண்டராம்பட்டில் கல்குவாரி செயல்படுவதற்கான மக்கள் கருத்து கேட்பு கூட்டம் நடைபெற்றது என்பதை அரசு ஆவணங்கள்மூலம் தெரிந்துகொண்டோம். கல்குவாரியின் மூலமாக நேரடியாக பாதிப்புக்குள்ளாகும் ரோடுபாளையம் கிராமத்தைச் சேர்ந்த எங்களுக்கு கருத்துக்கேட்பு குறித்த எவ்வித அறிவிப்பும் வழங்கப்படவில்லை. இதில் எங்கள் கிராமததைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்கவில்லை. மாவட்டத்தில் தண்டராம்பட்டு வட்டம் நிலத்தடி நீர் மட்டத்தில் மிகவும் அபாகரமான பகுதியாக மத்திய மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கல்குவாரி மீண்டும் செயல்படுமானால் ரோடுபாளையம் கிராமம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களான தேசூர் துள்ளுகுட்டிபாளையம் மற்றும் தண்டராம்பட்டு ஆகிய பகுதிகளுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. மேலும் நீர்பிடிப்பு ஏரியில் நீர் தங்குவதற்கான வாய்ப்பில்லை. எனவே கிராம மக்களுக்கும் காப்பு வனக்காட்டிலுள்ள மிருகங்களுக்கும் குடிநீர் கிடைக்காமல் போக வாய்ப்புள்ளது அதுமட்டுமின்றி கல்குவாரியின் மூலம் உற்பத்தியாகும் மக்காத தன்மையுள்ள மற்றும் நச்சுத்தன்மையுள்ள கழிவுப்பொருட்களை அப்புறப்படுத்துவதற்கும் சுத்திகரிப்பதற்கும் எந்தவித வழிவகையும் இதுவரை குவாரி மூலம் செயல்படுத்தப்படவில்லை. எங்கள் கிராமத்தில் வாழும் 100 குடும்பங்களை சேர்ந்த மக்கள் பாதிக்கப்படுவதோடு சுற்றுப்புற கிராம பகுதியிலும் உள்ள விவசாய கிணறுகள் விவசாய விளைநிலங்கள் மற்றும் கால்நடைகளும் பாதிப்பு ஏற்படுத்தும்.
எனவே ஏரிகள், காப்புக்காடு மற்றும் காட்டை நம்பியுள்ள வனவிலங்குகளையும் காப்பாற்றவும் கிராம மக்களின் குடிநீர் சுகாதாரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை சீர்குலைக்க வழிவகை செய்யும் கருப்புகல் குவாரி அனுமதியை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
மனுவினை பெற்றுக்கொண்ட ஆட்சியர் பா.முருகேஷ் இதுகுறித்து விசாரணை செய்து உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த அவர் தண்டராம்பட்டு பகுதியான ரோடுபாளையம் கிராமத்தில் பொதுமக்களின் அடிப்படை வசதியான பாதுகாக்கப்பட்ட குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்யவும் தண்டராம்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.