pic : file copy
திருவண்ணாமலை, செப்.7-
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரகத்தில் தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஒ.ஏ. நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் ஆட்சியர் பா.முருகேஷை நேரில் சந்தித்து நேற்று மனு அளித்தனர்.
அந்த மனுவில் தமிழ் விவசாயிகள் சங்கத்தின் தி.மலை மாவட்ட செயலாளர் ஆர்.கே.ஏகாம்பரம் குடியிருக்கும் பகுதியான சேத்துப்பட்டு வட்டம் ராஜமாபுரம் கிராமத்தில் விவசாயிகளை பாதிக்கும் வகையில் ஏரி நீர்பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆக்கிரமிப்பினை அகற்றக்கோரி சேத்துப்பட்டு வட்டார வளர்ச்சி அலுவலர், ராஜமாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் ஊராட்சி செயலாளர் ஆகியோரிடம் பலமுறை மனு அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.
மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்பை அகற்றாமல் ஆக்கிரமிப்பாளர்களோடு கைகோர்த்துக் கொண்டு ஆக்கிரமிப்பு அகற்ற மனு கொடுத்த தமிழ் விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஆர்.கே.ஏகாம்பரம் மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் விவசாயிகளுக்கும் மிரட்டல் கொடுத்து வருகின்றனர்.
எனவே ஏரி நீர்பாசன கால்வாய் ஆக்கிரமிப்பு செய்துள்ள சி.ஏழுமலை மீது தமிழ்நாடு அரசு நீர்நிலை ஆக்கிரமம் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் நீர்நிலை ஆக்கிரமிப்பை உடனடியாக அகற்றி விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு உறுதி செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக ஆக்கிரமிப்பினை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார்.
முன்னதாக ஆட்சியரகம் முன்பு நீர்பாசன ஏரிக்கால்வாய் ஆக்கிரமிப்பினை அகற்றக்கோரி தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் ஒ.ஏ. நாராயணசாமி தலைமையில் விவசாயிகள் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.