துபாய்:
சமீபத்தில் காஷ்மீர் மாநிலம் புலவாமா மாவட்டத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவ வீரர்கள் 40 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய விமானப்படையின் போர் விமானங்கள் பாகிஸ்தானுக்குள் சென்று பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது குண்டு மழை பொழிந்தன. இதில் 350 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். இந்த நிலையில் நேற்று பாகிஸ்தான் போர் விமானங்கள் இந்தியாவுக்குள் அத்துமீறி நுழைந்தன. இந்திய போர் விமானங்கள் அவற்றை விரட்டியடித்தன.
இதைத்தொடர்ந்து பாகிஸ்தான் தனது நாட்டின் வான்வழியாக விமானங்கள் செல்வதற்கு தடை விதித்துள்ளது.
இதன் காரணமாக துபாயில் இருந்து இயக்கப்பட்டு வரும் பிளை துபாய் விமான நிறுவனம் பாகிஸ்தானின் பைசலாபாத், முல்தான், சியால்கோட், கராச்சி ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமான சேவைகளை நேற்று முதல் 2 நாட்களுக்கு ரத்து செய்துள்ளது. இதேபோல் எமிரேட்ஸ் விமான நிறுவனம் இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் லாகூர் ஆகிய நகரங்களுக்கு செல்லும் விமான சேவையை ரத்து செய்துள்ளது.
ஓமனில் செயல்பட்டு வரும் விமான நிறுவனங்களும் பாகிஸ்தான் நாட்டின் இஸ்லாமாபாத், கராச்சி மற்றும் லாகூர் நகரங்களுக்கு இயக்கப்படும் விமானங்களை மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்துள்ளன.