திருவண்ணாமலை, செப் 3-

விவசாயிகள் ஒழுங்கு முறை விற்பனைக்கூட கிடங்கு வசதிகளை பயன் படுத்திக்கொள்ள வேண்டும் என்று திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் அழைப்பு விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது
திருவண்ணாமலை விற்பனைக்குழு கட்டுப்பாட்டின் கீழ் ஆரணி, செய்யாறு, செங்கம், சேத்துப்பட்டு, திருவண்ணாமலை, தேசூர். வேட்டவலம், வந்தவாசி, போளூர், புதுப்பாளையம், கீழ்பென்னாத்தூர், வானாபுரம், மங்களமாமண்டூர், தூசி,  பெரணமல்லூர், தானிப்பாடி, தெள்ளாறு, நாயுடுமங்கலம், ஆதமங்கலம்புதூர், மற்றும் கண்ணமங்கலம் ஆகிய ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் அறிக்கையிடப் பட்ட விளை பொருட்களான நெல், மணிலா, எள், ராகி, கம்பு, மிளகாய், கொள்ளு, பருத்தி, வெல்லம், தேங்காய், ஆமணக்கு, வரகு, துவரை, மற்றும் சோளம், ஆகிய வேளாண் விளைபொருட்களை  கொண்டு வந்து விற்பனை செய்து நல்ல விலையினை பெறவும் கிட்டங்கி மற்றும் உலர் களம் வசதிகளுடன் உள்ளன.

ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் வேளாண் விளை பொருட்களை விற்பனை செய்வதால் விவசாயிகளுக்கு மறை முக ஏலத்தின் மூலம் விளை பொருளின் தரத்திற் கேற்ப அதிக பட்ச விலை கிடைக்க வாய்ப்புள்ளது. ஒழுங்கு முறை விற்பனைக் கூடத்தில் விற்பனை செய்யப்படும் விளை பொருட்களுக்கு தரகு, கமிஷன் மற்றும் மகிமை பிடித்தம் ஏதுமின்றி நேரடியாக உரிய விவசாயிகளின் வங்கிக் கணக்கில் மின்னஞ்சல் முறையில் பணம் செலுத்தப் படுகிறது. சரியான எடை, போட்டி விலை மற்றும் இருப்பு வைக்க வசதி ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் உள்ளன.

விவசாயிகள் கொண்டுவரும் விளை பொருட்களை ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் இருப்பு வைக்க கிட்டங்கி வசதியும், உலர்த்துவதற்கு உலர்கள வசதியும்  உள்ளது. ஒரு விவசாயி பொருளீட்டுக்கடன் பெற்று அதிக பட்சமாக 180 நாட்களுக்கு தங்கள் விளைபொருளை கிட்டங்கியல் சேமிக்க இயலும் இதில் முதல் 15 நாட்களுக்கு எவ்வித வாடகையும் வசூல் செய்யப் படுவதில்லை. மீத முள்ள நாட்களுக்கு ஒரு நாளைக்கு ஒரு குவிண்டாலக்கு 20 பைசா வீதம் மட்டுமே வாடகை வசூல் செய்யப்படுகிறது.

மேலும் விளை பொருளை கிட்டங்கியில் இருப்பு வைக்கும் நிலையில் விவசாயிகளின் அவசர பணத் தேவைகளுக்கு அதிக பட்சமாக ஒரு விவசாயிக்கு ரூ.3 இலட்சம் வீதம் பொருளீட்டுக்கடன் வழங்கப்படுகிறது. இருப்பு வைத்த 15 நாட்களுக்கு எவ்வித வட்டியில்லா சலுகை வழங்கப்படுகிறது. மீதி நாட்களுக்கு மிகக்குறைந்த வட்டியாக 5சதவிதம் மட்டுமே வசூலிக்கப்படுகிறது.

ஆகையால் விவசாயிகள் தங்கள் விளைபொருட்களை ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்களில் மறைமுக ஏலத்தில் வைத்து விற்பனை செய்து அதிக பட்ச விலையினைப் பெற்று பயனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here