திருவண்ணாமலை, டிச. 03 –
திருவண்ணாமலையில் கார்த்திகை தீபத்திருவிழாவின் பிரசித்தி பெற்ற மகா தேரோட்டம் இன்று நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்து வருகின்றனர்.
மேலும், 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர். திருவண்ணாமலை கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 27 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி விமரிசையாக நடந்துவருகிறது.
தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் இத் தீபத் திருவிழா உற்சவத்தின் 6 ஆம் நாளான நேற்று இரவு வெள்ளித் தேரோட்டம் நடந்தது. அதைத் தொடர்ந்து, விழாவின் 7 ஆம் நாளான இன்று (3ம் தேதி) மகா தேரோட்டம் எனப்படும் பஞ்ச ரதங்கள் பவனி நடைபெற உள்ளது.
அதனை முன்னிட்டு தேரடி வீதியில் நிலையில் நிறுத்தியுள்ள பஞ்ச ரதங்களுக்கும் புனித கலசங்கள் பொருத்தும் பணி நடந்தது. மேலும், தேரோட்டத்தை முன்னிட்டு பஞ்ச ரதங்களும் மறு சீரமைப்பு செய்யப்பட்டு, அதன் உறுதித் தன்மையும் ஏற்கனவே சரிபார்க்கப்பட்டுள்ளது.
முற்றிலுமாக சீரமைக்கப் பட்ட சுப்பிரமணியர் தேர் வெள்ளோட்டமும் நடந்து முடிந்தது. மேலும், தேரோடும் மாடவீதியில் சாலை சீரமைப்பு, ஆக்கிரமிப்புகள் அகற்றம், மின்வயர்கள் குறுக்கீடு அகற்றம் போன்ற பணிகள் நிறை வேற்றப்பட்டு, தேரோட்டத்துக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.
இந்நிலையில், இன்று காலை 5.30 மணி முதல் 7 மணிக்குள் தேரோட்டம் தொடங்குகிறது. தேரோட்டத்தின் தொடக்கமாக விநாயகர் தேர் புறப்பாடு நடைபெறும். பின்னர், சுப்பிரமணியர் தேர் மாட வீதியில் பவனி வரும். அதைத் தொடர்ந்து, மதியம் 1 மணி அளவில், உண்ணாமுலையம்மன் சமேத அண்ணாமலையார் அருள்பாலிக்கும் பெரிய தேர் எனப்படும் ‘மகா ரதம்’ புறப்பாடு நடைப்பெறும்.
மகா ரதம் நிலையை அடைந்ததும், பராசக்தி அம்மன் தேர் புறப்பாடு நடைபெறும். அம்மன் தேரை பெண்கள் மட்டுமே வடம் பிடித்து இழுத்துச் செல்வது அதன் தனிச்சிறப்பாகும். தேரோட்டத்தின் நிறைவாக, சண்டிகேஸ்வரர் தேர் பவனி நடைப்பெறும்.
இரவு நேரத்தில் தேரோட்டம் நடத்துவது தொடர்பாக ஏற்கனவே அரசின் தடை உள்ளது. எனவே, பஞ்ச ரதங்களின் பவனியை இரவு 9 மணிக்குள் நிலையை அடையும் வகையில் கோயில் நிர்வாகம் திட்டமிட்டுள்ளது. தேரோட்டத்தின் போது, பாதுகாப்புக்காக 2 தீயணைப்பு வாகனங்கள், மருத்துவ குழுவினருடன் கூடிய 4 ஆம்புலன்ஸ் வாகனங்கள் ஆகியவை மகாரதத்தை பின் தொடர்ந்து செல்ல ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், தேர் சக்கரங்களுக்கு கட்டைப்போடும் சேவைப் பணியாளர்களுக்கு புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை, ஒரே மாதிரியான சீருடை (டி- சர்ட்) வழங்கப்பட்டுள்ளன. அதோடு, அவர்களுக்கு கோயில் நிர்வாகத்தின் சார்பில் காப்பீடும் செய்யப்பட்டுள்ளது.
தேர் சக்கரங்களை சுற்றிலும் 20 மீட்டர் இடைவெளி வரை பக்தர்கள் யாரும் செல்லாதபடி, போலீஸ் பாதுகாப்பு வளையம் அமைக்க உள்ளனர். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா கட்டுப்பாடுகளால் தடைப்பட்டிருந்த தேர் திருவிழா, இந்த ஆண்டு வழக்கமான உற்சாகத்துடன் நடைப்பெறுகிறது.
எனவே, தீபத்திரு விழா தேரோட்டத்தை தரிசிக்க, ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரண்டு வருகின்றனர்.
மேலும், தேரோடும் மாடவீதிகளில் மோப்பநாய் சோதனை, மெட்டல் டிடெக்டர் சோதனைகள் தீவிரமடைந்துள்ளன. எஸ்பி கார்த்திகேயன் தலைமையில், சுமார் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.
தேரேட்டத்தின் போது, கூட்ட நெரிசலில் திருட்டு, செயின் பறிப்பு போன்ற வற்றை கண்காணிக்க 162 இடங்களில் சிசிடிவி கேமராக்கள், 22 இடங்களில் அதிநவீன சுழலும் கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.






















