மயிலாடுதுறை, பிப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்..
தேர்தல் பத்திரத் திட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது; தேர்தல் பத்திரத் திட்டம் வெளிப்படித்தன்மை அற்றது : சட்டவிரோதமானது: ஆகவே அது ரத்து செய்யப்படுகிறது – என்று உச்சநீதிமன்றம் அறிவித்து விட்டது.
முன்பு, அரசியல் கட்சிகள் 20,000 ரூபாய்க்கு மேல் நன்கொடை பெற்றால் அது பற்றி தேர்தல் கமிஷனிடம் தகவல் தெரிவிக்க வேண்டும் என்பதுதான் அதுவரை இருந்து வந்த சட்டம். ஆனால் 2018 சனவரி மாதம் தேர்தல் நிதி பத்திரத் திட்டத்தை மோடி அரசு கொண்டு வந்தது. இதன்படி ரொக்கமாகவோ காசோலையாகவோ கட்சிகளுக்கு நன்கொடைகளை வாரி வழங்கலாம்; எவ்வளவு வேண்டுமானாலும் வழங்கலாம்; எவர் பெயரும் வெளியிடப்படாது. பாரத ஸ்டேட் வங்கிக்கு பத்திரங்களை வெளியிட அதிகாரம் அளிக்கப்பட்டது. இதை 15 நாட்களில் வங்கியில் கொடுத்து பணமாக்கிக் கொள்ளலாம் என்பதுதான் மோட் அரசு கொண்டு வந்த தேர்தல் பத்திரத் திட்டமாகும்.
மேலும் யார் எவ்வளவு நன்கொடை கொடுத்தார்கள் என்பது வெளியிடப்படாது. இயற்கை வளங்களையும், கனிம வளங்களையும் சூறையாடுவதற்காக காத்திருக்கும் பன்னாட்டு கார்ப்பரேட் நிறுவனங்களும், இந்திய நிறுவனங்களும் ஏராளமான தொகையை பா.ஜ.க.வுக்கு வழங்கி இருக்கின்றன. இவற்றைப் பயன்படுத்தி எம்.எல் ஏ-க்கள் எம்.பி. -க்களை விலைக்கு வாங்குவது, தேர்தலில் பல்லாயிரம் கோடிகளைக் கொட்டி ஆட்சியைக் கைப்பற்றுவது, ஆட்சிக்கு வந்த பிறகு ஆறுகளையும், மலைகளையும், கனிம வளங்களையும், இயற்கை வளங்களையும் பன்னாட்டு நிறுவனங்களுக்கு வாரி வழங்கி விடுவது என்ற வகையில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்த பேரழிவுக்கு, இயற்கை வளங்களுக்கான விலையாக செலுத்தப்பட்டுக் கொண்டிருந்த பெரிய அளவிலான நன்கொடைகளுக்கு உச்சநீதிமன்றம் ஒரு தடையை ஏற்படுத்தியுள்ளது.
2024 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நாடாளுமன்றத்தின் 18-வது மக்களவைத் தேர்தல் நடப்பதாக இருக்கிறது. இந்நிலையில் இத்தீர்ப்பு வந்திருப்பது, தேர்தல் ஜனநாயகத்தை பணத்தாலேயே அடித்து காயப்படுத்துவதிலிருந்து இத்தீர்ப்பு ஓரளவு காப்பாற்றும் என்றேக் கருதலாம்.
2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் அன்றைய நிதியமைச்சர் அருண் ஜெட்லியால் தேர்தல் பத்திர திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. ஆயிரம் ரூபாய் முதல் ஒரு கோடி ரூபாய் வரை தேர்தல் பத்திரத்தை பாரத ஸ்டேட் வங்கி வெளியிடும். தேர்தல் பத்திரங்களை வாங்குபவர்கள் பற்றிய எந்த தகவலும் அதில் இருக்காது. இதற்கு ஏற்றபடி, பெரிய அளவிற்கான நன்கொடைகளை தடையின்றி வழங்குவதற்கு ஏற்ப, மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், வருமான வரி சட்டம், கம்பெனி சட்டம் ஆகியவற்றில் திருத்தங்கள் செய்யப்பட்டன.
1) ரிசர்வ் வங்கி சட்டம்-RBI Act -1934
ரிசர்வ் வங்கி மட்டுமே பணமும் பண பத்திரங்களும் வெளியிட முடியும் என்று கூறுகிறது. ஆனால் பாரத ஸ்டேட் வங்கி பத்திரங்களை வெளியிட மோடி அரசு அனுமதித்தது. இது சட்ட மீறல்.
2) மக்கள் பிரதிநிதித்துவ சட்டம்- 1951
மக்கள் தங்களிடம் வாக்குகளைப் பெறுகின்ற கட்சிகள் எவ்விதம் பணத்தை பெறுகின்றன, என்ன செலவு செய்கின்றன என்ற அறியும் உரிமை படைத்தவர்கள் . ஆனால், தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி கூட எந்த தகவலையும் தேர்தல் பத்திரங்கள் குறித்து அறிந்து கொள்ள மக்களுக்கு உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
3)வருமானவரிச் சட்டம் -1961
எந்த பணப் பரிவர்த்தனையானாலும் அது வருமான வரித் துறையின் பார்வைக்கு உட்பட்டது. ஆனால் தேர்தல் பத்திரங்களுக்கு வருமான வரி விலக்கு தர மோடி அரசு விதிமுறைகளை திருத்தியது.
4) கம்பெனிகள் சட்டம் – 2013
இலாபத்தில் குறிப்பிட்ட விழுக்காட்டை நன்கொடையாக கம்பெனிகள் வழங்கலாம் என்று இருந்ததை, நட்டத்தில் இயங்குகின்ற, திவாலாகிவிட்ட நிறுவனங்கள் கூட தேர்தல் பத்திரங்கள் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நன்கொடை வழங்கலாம் என்று மோடி அரசு திருத்தியது. திவால் ஆகிவிட்ட கம்பெனிகள் தேர்தல் பத்திரம் மூலம் நன்கொடைகள் எப்படி வழங்க முடியும்? அப்படி வழங்கினால் அதன் நோக்கம் தான் என்ன?
அப்பட்டமான சட்ட மீறல்களைச் செய்த தேர்தல் பத்திர திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டன. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது ஐந்து நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தையே உச்ச நீதிமன்றம் இரத்து செய்துள்ளது.
“கருப்பு பணத்தை ஒழிப்பதற்காக இந்த திட்டம் கொண்டுவரப்பட்டதாக கூறுவதை ஏற்க முடியாது. அரசியல் சட்டத்திற்கு விரோதமான ஊழலுக்கு வழிவகுக்கும் திட்டம் இது. எனவே இந்த திட்டமும் இதற்காக மற்ற சட்டங்களில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களும் ரத்து செய்யப்படுகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் இதுவரை விற்பனை செய்யப்பட்ட தேர்தல் பத்திரங்கள் குறித்த முழுமையான விபரங்களை பாரத ஸ்டேட் வங்கி வருகிற மார்ச் 6ஆம் தேதிக்குள் தேர்தல் ஆணையத்திடம் தாக்கல் செய்ய வேண்டும்.
தேர்தல் ஆணையம் அதை 13ஆம் தேதிக்குள் தன் இணையதளத்தில் வெளியிட வேண்டும் ” என்பது தீர்ப்பின் சாரம்.
ஒரு அரசியல் கட்சி பெறும் நன்கொடை குறித்து வாக்காளர்கள் தெரிந்து கொள்வது அவசியம்; அந்த உரிமை உண்டு என்று தீர்ப்பு கூறுகிறது. ஜனநாயக முறையான தேர்தல் முறை என்றால் அதில் நேர்மை நிலவுவது முக்கியமானது என்றும், பிரதிபலன் எதிர்பார்த்து அளிக்கும் நன்கொடைகள் அரசியல் ஆதரவு நிலைப்பாடாகக் கருத முடியாது என்றும் தீர்ப்பு தெரிவித்துள்ளது. அரசியல் சட்டத்தின் 19 (1) (ஏ) பிரிவு வழங்கும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்திற்கும் தகவல் அறியும் உரிமைக்கும் எதிரானதாக தேர்தல் பத்திரத்திட்டம் அமைந்துள்ளது என்றும், கார்ப்பரேட் நிறுவனங்கள் எல்லையின்றி நன்கொடை அளிப்பதற்காக கம்பெனி சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்தது தன்னிச்சையானது என்றும், அரசியல் சட்டத்தின் 14 வது பிரிவு வழங்கும் சமத்துவ உரிமையை மீறும் செயல் என்றும் தீர்ப்பு குறிப்பிடுகிறது. ஆகவே இத்திட்டம் அரசியல் சட்டத்திற்கு எதிரானது, இததிட்டம் ரத்து செய்யப்படுகிறது. தேர்தல் பத்திரத் திட்டம் செயல்படுத்தப்படுவதற்கு வசதியாக செய்யப்பட்ட மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் – கம்பெனி சட்டம் – ஆகியவற்றில் செய்யப்பட்ட சட்டத் திருத்தங்களும் செல்லாதவை என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதுவரை வாங்கப்பட்ட தேர்தல்பத்திரங்கள் பற்றிய விபரம், வாங்கியவர் பெயர்கள், பத்திரங்களின் மதிப்பு போன்றவை தேர்தல் கமிஷனிடம் மார்ச் 6ஆம் தேதிக்குள் பாரத ஸ்டேட் வங்கி சமர்ப்பிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. இதுவரை எந்தெந்த அரசியல் கட்சிகள் எந்தெந்த தேதிகளில் பணம் பெற்று பணமாக்கியுள்ளன என்பதையும் தெரிவிக்க வேண்டும் என்று கூறியுள்ளது. தேர்தல் கமிஷன் தனது அதிகாரபூர்வ இணையதளத்தில் மார்ச் 13-ஆம் தேதிக்குள் இந்த விபரங்களை வெளியிட வேண்டும்.
தேர்தல் பத்திரங்கள் என்பதன் மூலமாக பாரதிய ஜனதா கட்சி 2018 ஆம் ஆண்டு நடைமுறைக்கு கொண்டு வந்தது.
மக்களவை அல்லது சட்டசபை தேர்தல்களில் பதிவான வாக்குகளில் குறைந்த பட்சம் ஒரு சதவீத வாக்குகளை பெற்ற அரசியல் கட்சிகளுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நன்கொடை அளிக்க முடியும். தேர்தல் கமிஷன் வெளியிட்ட தகவல்களின்படி 2016 முதல் 2022 வரை பாரதிய ஜனதா கட்சி 10,122 கோடியை பெற்றுள்ளது. காங்கிரஸ் கட்சி 1,547 கோடியை பெற்றுள்ளது. திரு ணாமுல் காங்கிரஸ் 523 கோடியை பெற்றுள்ளது. வேறு சில கட்சிகள் சிறிய அளவில் பெற்றுள்ளன.
நன்கொடைகளை பாஜகவுக்கு பெருவாரியான வாரி வழங்கியதன் நோக்கம் என்ன? அவர்களுக்குள் உள்ள மறைமுக ஒப்பந்தம் என்ன? என்பது பதில் அளிக்கப்படாத கேள்விகள். நாசகாரத் திட்டங்களை வலுக்கட்டாயமாக நடைமுறைப்படுத்துவதும், சுற்றுச்சூழல் விதிமுறைகளை முதலாளிகளின் விருப்பத்திற்கு ஏற்ப தளர்த்துவதும், மக்களின் கருத்து கேட்புக் கூட இனி தேவையில்லை என்று விதிமுறை செய்வதும் ஏன் என்ற கேள்விக்கு தேர்தல் பத்திரமே பதில் கூறும். ஒருபுறம் பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை செய்யப்படுகின்றன. மறுபுறம் தேர்தல் பத்திரம் என்ற பெயரில் மிகப் பெரும் தொகைகள் பாஜகவுக்கு வழங்கப்படுகின்றன. இப்போதும் தேர்தல் பத்திரங்கள் திட்டம் தடுக்கப்படாதிருந்தால் ஒட்டுமொத்த நாடுமே முதலாளிகளின் கைக்கு மாறுவதை தடுக்க முடியாது. அவ்வகையில் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.
ஜனநாயகம் மற்றும் அரசியல் நிதி அளிப்பதில் வெளிப்படைத் தன்மையை கொண்டுவர இத் தீர்ப்பு உதவியுள்ளது, அரசியலமைப்பு சட்டத்தையும், தகவல் அறியும் உரிமை சட்டத்தையும், தேர்தல் பத்திர திட்டம் மீறி உள்ளது. ஒரு நிறுவனத்தின் இலாபத்தில் 7.5% நன்கொடையாக அளிக்கலாம் என்ற உச்சவரம்பை நீக்கி, அரசியல் கட்சிகளுக்கு எவ்வளவு வேண்டுமானாலும் நன்கொடை அளிக்க வகை செய்யும் ஊழலை உத்தரவாதப்படுத்தும் தேர்தல் பத்திர சட்டம் எதற்காக, யாருக்கு நன்கொடை அளிக்கப்படுகிறது என்பதை எந்த கம்பெனியும், நிறுவனமும் வெளியிட வேண்டியது இல்லை என்ற என்று கம்பெனி சட்டத்தில் திருத்தத்தை பாஜக அரசு செய்தது. இது ஊழலின் ஊற்றுக்கண். ஓசைப்படாமல் பொதுத்துறை நிறுவனங்களும், நாட்டின் வளங்களும், தனியாருக்கு கைமாறுவதற்கும் கம்பெனிகளின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு செல்லப்படுவதற்கும் வழிவகை செய்தது.
அடையாளம் காணப்படாத பெரு நிறுவன நன்கொடைகள் அரசின் கொள்கை முடிவுகளை தீர்மானிக்கின்றன. இது இப்போது தடுக்கப்பட்டுள்ளது.
ஒரு கம்பெனி நன்கொடை கொடுத்தால் அதற்கான வரியைக் கட்ட வேண்டும். ஆனால் தேர்தல் பத்திரங்கள் வாங்கினால் அதற்கு வரி கிடையாது என்பது மட்டுமல்ல, வருமான வரி விலக்கும் அளிக்கப்படுகிறது.
தேர்தல் பத்திரங்கள் வாங்கி நன்கொடை அளித்தவர்களில் 94% ஒரு கோடி ரூபாய் பத்திரங்களாக வாங்கி வழங்கியிருக்கிறார்கள். அப்படி என்றால், நன்கொடையாளர்கள் யார்? அவர்கள் என்ன காரணத்திற்காக இவ்வளவு பெரிய நன்கொடைகளை வழங்குகிறார்கள்? ஆட்சி அதிகாரத்திற்கு வர வாய்ப்புள்ள கட்சிகளுக்கு எந்த புரிதலின் அடிப்படையில் மிகப்பெரும் நன்கொடைகள் வழங்கப்படுகின்றன? – என்பவை சாமானிய மக்களின் புரிதலுக்கு அப்பாற்பட்டவை.
ஜனநாயகத்தை பணபலம் மூலம் மேலாளுகை செய்து வரும் அரசியல் கட்சிகள் தீர்ப்பை ஏற்றுக்கொண்டு சும்மா இருப்பார்கள் என்று கூறிவிட முடியாது. இத்தீர்ப்பை சீராய்வு செய்யும்படி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்படலாம். அப்படி சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டாலும், அதை உச்ச நீதிமன்றம் நிராகரிக்க வேண்டும். இத்தீர்ப்பை செயலற்றுப் போகச் செய்யும் வகையில் வேறு சட்டங்களை பாஜக அரசு இயற்றினாலும் அச்சட்டங்களையும் உச்சநீதிமன்றம் செல்லுபடியற்றதாகச் செய்ய வேண்டும்.
பணத்தை குவிக்க இன்னொரு வழியையும் மோடி அரசு கண்டுபிடித்து வைத்திருக்கிறது. PM Cares Fund என்பதுதான் அது.
பி எம் கேர் ஃப்ண்ட் என்பது கோவிட் 19 (Covid-19) தொற்றுநோய் பரவிய போது உருவாக்கப்பட்டது. Public Charitable Trust என்பதாக, (1908 ஆம் ஆண்டின் பதிவு சட்டத்தின் கீழ்) உருவாக்கப்பட்டது. 2020ல் பி.எம். கேர்ஸ் ஃபண்டு இயற்கை மற்றும் மனிதர்கள் உருவாக்கிய பேரழிவுகளை சந்திப்பதற்கான நிதியாக உருவாக்கப்பட்டது. இதற்கு பணம் செலுத்தினால், வருமானவரிச் சட்டம் 80 – G யின் கீழ் 100% வருமான வரி விலக்கு அளிக்கப்பட்டது. 2013- ஆம் ஆண்டு கம்பெனி சட்டத்தின் கீழ் Corporate Social Responsibility என்ற பெயரில் மக்கள் நலனுக்கு நிதி அளிக்க வழிவகை செய்யப்பட்டது. அதைப் பயன்படுத்தி பெரிய கம்பெனிகளிடமிருந்து ஏராளமான நிதி பி. எம்.கேர்ஸ் ஃபண்டில் குவிக்கப்பட்டிருக்கிறது.
மேலும் Foreign Contribution Regulation Act (FCRA) சட்டத்திலிருந்தும் விலக்கு அளிக்கப்பட்டது. பல நாடுகளில் இருந்து ஏராளமான நன்கொடைகள் குவிந்தன, ஆனால் எவ்வளவு தொகை சேர்ந்தது, என்ன செலவு செய்யப்பட்டிருக்கிறது என்ற கணக்கைத் தர பிரதமர் அலுவலகம் மறுத்துவிட்டது. பி.எம் கேர்ஸ் ஃபண்டு என்பது “பொது அமைப்பு அல்ல” என்று விளக்கம் கொடுத்தது. நன்கொடைகளை வாரி வழங்கிய பொதுமக்களுக்கு தாங்கள் வழங்கிய பணம் எவ்வளவு சேர்ந்துள்ளது, அது எவ்வளவு செலவிடப்பட்டுள்ளது என்று அறிந்து கொள்ளும் உரிமை இல்லையாம்! முன்னமே Prime Minister’s National Relief Fund (PMNRF) என்ற பிரதமர் தேசிய நிவாரண நிதி என்று ஒன்று இருக்கும்போது, இது தனியாக உருவாக்கப்பட்டு இந்தத் தொகை இரகசியமான வழிகளில் செலவிடப்படுகிறது. ஆர்.எஸ்.எஸ் மற்றும் சங்பரிவார் வளர்ச்சிக்கும், செயல்பாடுகளுக்கும் இந்தத் தொகை அளிக்கப்படவில்லை என்றால், இப்பெருந்தொகை செலவிடப்படும் வகை குறித்து வெளிப்படையாக பிரதமர் அலுவலகம் அறிவித்திருக்கலாமே!
தேர்தல் பத்திரத்திட்டத்தை ரத்து செய்த உச்ச நீதிமன்றம் பி.எம். கேர்ஸ் ஃபண்டு திரட்டுவதையும் தடை செய்ய வேண்டும். பிரதமர் நிவாரண நிதி என்ற ஒன்று இருக்கும்போது இப்படி நிதி திரட்டி, வெளியிட முடியாத காரணங்களுக்கு செலவிடப்படும் இந்த திட்டமும் உச்சநீதிமன்றத்தால் தடை செய்யப்பட வேண்டும்.
-பேராசிரியர் த.செயராமன், நெறியாளர், தமிழ்மண் தன்னுரிமை இயக்கம்
17.02.2024.






















