திருவாரூர், மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் கே. நாகராஜ்
திருவாரூர் மாவட்டம், வரலாற்று சிறப்பு மிக்க திருவாரூர் தியாகராஜ சுவாமி ஆலயத்தின் பங்குனி உத்திரப் பெருவிழா கடந்த மாதம் 27 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது.
மேலும் அவ்விழாவின் முக்கிய விழாவான உலக பிரசித்திப் பெற்றதும், ஆசியாவிலேயே மிகப் பெரியத் தேர் என அழைக்கப்படும் ஆழித் தேரோட்ட விழா இன்று கோலாகலமாக நடைப்பெற்றது.
இன்று காலை சரியாக 5 மணிக்கு வினாயகர், சுப்ரமணியர் தேர்கள் வடம் பிடிக்கப்பட்டு நான்கு ராஜ வீதிகளிலும் முதலில் வலம் வந்தது. அதனைத் தொடர்ந்து உலக பிரசித்தி பெற்ற பிரமாண்ட ஆழித்தேரோட்டம் காலை 8.50 மணிக்கு துவங்கியது்.
அவ் ஆழித்தேரை தருமபுர ஆதினம், வேளாக்குறிச்சி ஆதினம் ஆகியோர் வடம் பிடித்து திருத்தேரோட்டத்தை துவக்கி வைத்தனர். தொடர்ந்து ஆழித் தேரோட்டம் கோலகலமாக நடைப்பெற்று வருகிறது.
ஆழித்தேரோட்ட விழாவில் சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்று ஆழித்தேரின் வடம் பிடித்து ஆரூரா, தியாகேசா என்ற பக்தி முழக்கம் விண்ணை முட்டுமளவிற்கு எழுப்பியவாறு ஆழ்த்தேரினை இழுத்தனர்.
இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் சாரு ஸ்ரீ திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விஜயகுமார் ஆகியோர் பங்கேற்றனர்.
மேலும் மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல் துறையின் சார்பில் சிறப்பான பாதுகாப்பு, அடிப்படை வசதிகள் மற்றும் சுகாதார ஏற்பாடுகளை வெகுச்சிறப்பாக செய்திருந்தனர். குறிப்பாக ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்று வரும் அந்நிகழ்வில் எவ்வித அசாம்பாவிதங்களும் ஏற்படாதவாறு அதனை தடுத்து பொதுமக்களுக்கு பாதுகாப்பினை உறுதி செய்யும் வகையில் மாவட்டம் முழுவதிலும் இருந்து சுமார் 2500 க்கும் மேற்பட்ட காவல் துறையினர் வரவழைக்கப்பட்டு பாது காப்பு பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும் அவசர சிகிச்சை அளித்திடும் வகையில் ஆங்காங்கே நடமாடும் 25 க்கும் மேற்பட்ட 108 ஆம்புலன்ஸ் வாகனங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. முன்னதாக நோய் தொற்று எதுவும் ஏற்பட்டுவிடாத வண்ணம் நகர் முழுக்க நோய் எதிர்ப்பு நாசினி பவுடர்கள் மற்றும் மருந்துகள் நகராட்சி ஊழியர்கள் சார்பில் தெளிக்கப்பட்டது. மின்தடை ஏற்படாதவாறு மின் வாரிய ஊழியர்கள் தகுந்த அளவில் பணியில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
மேலும் சமூக ஆர்வலர்கள் மற்றும் தன்னார்வலகள் சார்பில் வெயிலின் தாக்கத்தினை போக்கிடும் வகையில் பொதுமக்களுக்கு ஆங்காங்கு நீர், மோர், மற்றும் பானகரம், பிஸ்கெட் சுவைதரும் பல்வேறு உணவுப்பொருட்களை வழங்கியவாறு தொண்டு செய்து வருகின்றனர். அதுப்போன்று தூய்மை பணியாளர்கள் திரளானவர்கள் நகரை தூய்மை படுத்தும் பணியை செய்து வருகின்றனர். ஒட்டு மொத்தமாக மாவட்ட அரசு நிர்வாக ஊழியர்கள் சுற்றிச் சுற்றி சுழலன்று செயல் பட்டு வருகின்றனர். அதற்கிடையில் பல்வேறு செய்தி நிறுவனங்கள் சார்பில் வீடியோ கவரேஜ் மற்றும் செய்தி சேகரிப்பில் நிற்காது அங்குமிங்கும் ஓடியவாறு ஈடுப்பட்டு வருகின்றனர். மொத்தத்தில் விழாக்கோலத்தில் நகரமே குதுகலத்துடன் இருந்து வருகிறது.





















