திருவண்ணாமலை டிச.8-
திருவண்ணாமலையில் நுகர்வோருக்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் நேற்று காலை நடைபெற்றது. அனைவரையும் சினம் தொண்டு நிறுவன செயலாளர் இராம. பெருமாள் வரவேற்றார். சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப்பைச் சேர்ந்த கீர்த்தனா தங்கவேல் தொடக்கவுரையாற்றினார்.
இதில் மாவட்ட சமூக நல அலுவலர் பி.மீனாம்பிகை, உணவு பாதுகாப்பு அலுவலர் டி.இளங்கோவன், அன்னை சாந்தி மருத்துவமனையைச் சேர்ந்த நீரழிவு நோய் சிறப்பு நிபுணர் டாக்டர் எஸ்.விஜயபிரகாஷ், ராமகிருஷ்ணா ஓட்டலைச் சேர்ந்த சசிகுமார் ஆகியோர் பேசினார்கள்.
கருத்தரங்கில் சிட்டிசன் கன்ஸ்யூமர் அண்ட் சிவிக் ஆக்க்ஷன் குரூப் (சி.ஏ.ஜி), இயக்குனர் எஸ்.சரோஜா சிறப்புரையாற்றினார்.
அவர் பேசியதாவது, நாம் தேர்ந்தெடுக்கும் உணவு மற்றும் கவலைக்கு உட்பட்ட ஊட்டச்சத்துக்களை உட்கொள்ளும் முறை நம் உடல்நலத்தை பாதிக்கிறது. உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு அதிகம் உள்ள உணவுகள், தொற்று அல்லாத நோய்களான இருதய நோய், புற்று நோய், சுவாச நோய்கள், நீரிழிவு நோய் போன்றவற்றிற்கு முக்கிய காரணியாக அமைகிறது. ஒவ்வொரு ஆண்டும், உலகளவில், 71சதவீத இறப்புகளுக்கு இதுவே காரணமாகிறது.
இதேபோல், இந்தியாவில் 77 மில்லியன் மக்கள் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இந்த நாள்பட்ட சுகாதார நிலைமைகள் அனைத்தும் அவற்றின் உணவு அபாயங்களைக் குறைப்பதன் மூலம் தவிர்க்கப்படலாம். பொட்டலப்படுத்தப்பட்ட மற்றும் அல்ட்ரா-பதப்படுத்தப்பட்ட உணவு பொருட்கள் மற்றும் பானங்களில், உப்பு, சர்க்கரை, கொழுப்பு மற்றும் பிற தீங்கு விளைவிக்கும் பொருட்களின் அனுமதிக்கப்பட்ட அளவை கட்டுப்படுத்துவதாலும்; அதிக உயிர்களைக் காப்பாற்ற இயலும். கண்காணிப்பு இல்லாத உப்பு, சர்க்கரை மற்றும் கொழுப்பு உட்கொள்ளல் மில்லியன் கணக்கான இந்தியர்களின் ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தலாக உள்ளது. உணவுகளில் அதிக உப்பு உள்ளடக்கம் இருப்பதை நுகர்வோருக்கு எச்சரிக்க, பொட்டலப்படுத்தப்பட்ட உணவுகளில் வெளிப்படையாக உப்பு, சர்க்கரை, மற்றும் கொழுப்பின் அளவை முன் பக்க லேபிளில் தெரிவிக்க வலியுறுத்தி வருகிறோம். நுகர்வோருக்கு அபாயங்கள் குறித்து உடனடியாக எச்சரிக்கை செய்யும். இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் சில ஆண்டுகளுக்கு முன்பு முன் பக்க பேக் லேபிளிங்கிற்கு விதிமுறைகள் கொண்டுவர முயற்சி செய்ய ஆரம்பித்தாலும், அதன் சட்டங்கள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. பிரச்சினையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு, சராசரி இந்திய நுகர்வோரின் நலன்களை மனதில் கொண்டு, விதிமுறைளை விரைவில் ஆணையம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார். முடிவில் சினம் தொண்டு நிறுவனத்தைச் சேர்ந்த நோயல் அந்தோணிதாஸ் நன்றி கூறினார்