கும்பகோணம், ஜன. 22 –
கும்பகோணம் அருகாமையில் உள்ள திருமண்டங்குடி திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம், விவசாயிகளுக்கு சுமார் ரூ.112 கோடி மதிப்பிலான நிலுவைத் தொகையினை வழங்காமலும், மேலும், சுமார் 6 ஆயிரம் விவசாயிகள் பெயரில் மோசடியாக, ரூ.300 கோடி மதிப்பீலான தொகையினை 12 வங்கியிலிருந்து கடனாகப் பெறப்பட்டதாகவும், மேலும் அதன் மூலம் விவசாயிகளை கடனாளியாக மாற்றியுள்ளதாகவும் கரும்பு விவசாயிகள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.
மேலும் நிலைவையில் உள்ள நிலுவைத் தொகையினை உடனடியாக ஆலை நிர்வாகம் வழங்கிட வேண்டும் என்பதை வலியுறுத்தியும், மேலும் இப்பிரச்சினைக் குறித்து தமிழ்நாடு முதலமைச்சரின் கவனத்தை ஈர்த்திடவும் தொடர்ந்து, தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் 54 நாட்களாக அந்த ஆலை முன் காத்திருப்பு போராட்டம் நடைபெற்று வருகிறது.
மேலும் இதுக் குறித்து தமிழக முதல்வரிடம் முறையிட்டும் இவர்கள் பிரச்சினை இன்னும் தீராமல் காலம் கடந்துக் கொண்டு வருவதாக கரும்பு விவசாயிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு ஆதரவாகவும், அவர்களது கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தியும், இவர்களை கண்டுகொள்ளாத தமிழக அரசைக் கண்டித்தும், இந்த ஆலையைக் கூட்டுறவுத் துறை மூலம் தமிழக அரசு கையகப்படுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கையை வலியுறுத்தி விவசாயிகள் வயிற்றில் அடிக்கும் திருமண்டங்குடி சர்க்கரை ஆலை பழைய புதிய நிர்வாகிகளை கண்டித்து காந்தி பூங்கா முன்பு மாவட்ட துணைத் தலைவர் கணேசன் ஒன்றிய தலைவர் கலைமணி ஆகியோர் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் ஒன்றிய பொருளாளர் பாக்யராஜ் மாவட்ட குழு உறுப்பினர் ராமன் ஒன்றிய துணை செயலாளர் ஜெயபால் மாவட்டச் செயலாளர் கண்ணன் மாற்றுத்திறனாளி அமைப்பு மாநில குழு உறுப்பினர் பழ அன்புமணி ஒன்றிய துணைத் தலைவர் குணசேகரன் ஒன்றிய குழு உறுப்பினர் ராஜா ஒன்றிய தலைவர் ராஜாராம் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.
























