தஞ்சாவூர், ஏப். 07-
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு…
தமிழகத்தின் நெற்களஞ்சியமாகத் தஞ்சாவூர் மாவட்டம் விளங்கி வருகிறது. ஆனால் தஞ்சை மாவட்டத்தில் நெல் சாகுபடி மட்டுமல்லாமல் கரும்பு எள்,உளுந்து,கடலை, பருத்தி, சோளம், உள்ளிட்ட பலவகை முதன்மை பயிர்களும் அதிக அளவில் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.
இதில் முக்கியமாகக் காவிரித்தாய் ஓடும் திருவையாறு பகுதியில் விவசாயிகள் வாழை மற்றும் வெற்றிலை சாகுபடியும் பெருமளவில் செய்து வருகின்றனர். இப்படி உணவிற்குத் தேவையான அனைத்து பயிர்களும் தஞ்சை மாவட்ட விவசாயிகளால் உற்பத்தி செய்யப்பட்டு வரும் நிலையில் திருவையாறு அடுத்த வடுகக்குடி, ஆச்சனூர், வளப்பக்குடி, சாத்தனூர் உள்ளிட்ட கிராமங்களில் காவிரி கரையோர பகுதிகளில் சிறுதானியக் கீரைகள் 20-க்கும் மேற்பட்ட ஏக்கரில் பரவலாகச் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றனர்.
அந்த வகையில் திருவையாறை அடுத்து வடுகக் குடியைச் சேர்ந்த விவசாயி மதியழகன் சுமார் 2 ஏக்கரில் வல்லாரை, தண்டுக்கீரை, அரைக்கீரை, புளிச்சக்கீரை, அகத்திக்கீரை, பாலா கீரை, உள்ளிட்ட பல வகையான சிறுதானிய கீரை வகைகளைச் சாகுபடி செய்து தஞ்சை மாவட்டம் முழுவதும் வியாபாரிகளிடம் மொத்த விலைக்கு விற்பனை செய்து வருகிறார்.
கீரை சாகுபடியில் விவசாயிகள் சந்திக்கும் சவால்கள் பற்றியும், விவசாயிகள் எதிர்கொண்டு வரும் பிரச்சனைகள் பற்றியும் விவசாயி மதியழகன் கூறியதைப் பார்க்கலாம்..
நாங்கள் திருவையாறு அடுத்த சாத்தனூர் கிராமத்தில் இரண்டு ஏக்கரில் கீரை சாகுபடி செஞ்சுட்டு வரோம். பொதுவாக கீரை சாகுபடி செய்ய வெயில் காலம் தான் உகந்தது. மழைக்காலத்தில் கீரைகள் அழுகிப் போயிரும். நிலத்தை பதப்படுத்தி சிறு சிறு இடங்களில் பரவலாக இயற்கை முறையில் கீரை சாகுபடி செஞ்சிட்டு வரோம்.
நாங்கள் மக்களிடம் நேரடியா விற்கும் போது ஒரு கட்டு கீரை ரூ.5-க்கு விற்பனை செய்வோம். ஆனால் அதுலயும் ரேட் கம்மி பண்ணி கேப்பாங்க, ஒரு கட்டு கீரைக்கு ஆள் செலவு கூலி எல்லாம் போக இரண்டு ரூபாய் தான் கிடைக்கும். அதனால நேரடியா போய் விற்பனை செய்ததால் வண்டியில் வைத்து எடுத்துட்டு போகணும் அதுல நிறையச் செலவு ஏற்படறதால மக்கள் கிட்ட நேரடி விற்பனை முறையை கம்மி பண்ணிக்கிட்டோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள உணவகங்கள், விடுதிகளுக்கு நேரடியாகவும், வியாபாரிகளுக்கு மொத்த விலைக்கும் கீரைகளை ஏற்றுமதி செய்கிறோம்.
ஒரு கட்டு கீரை ரூ.5-க்கு தரோம். ஒரு நாளைக்கு 500 கட்டு கீரையை ஏற்றுமதி செஞ்சிட்டு வரோம். ஆள் கூலி, தண்ணீருக்கு ஆகும் செலவு, உள்ளிட்ட செலவுகள் போக ஒரு கட்டு கீரைக்கு ரூ.2 தான் கிடைக்கும்,இது எங்களுக்குச் சொந்த நிலமும் கிடையாது குத்தகை முறையில்தான் சாகுபடி செஞ்சிட்டு வரோம். அதுனால பெரிய அளவில் லாபம் அப்டியெல்லாம் ஒன்றும் இல்ல. ஏதோ குடும்பத்தை நடத்திட்டு வரோம்.
புளிச்சக்கீரை எல்லாம் உடலுக்கு அவ்வளவு குளிர்ச்சி. வல்லாரை குடல் புண்களை போக்கும். அதே மாதிரி ஒவ்வொரு கீரைக்கும் நமது உடலுக்குத் தேவையான ஏகப்பட்ட ஆரோக்கியமான சத்துகள் இருக்கிறது. ஆட்டுக்கறி ரூ.800-க்கு விக்கிது கோழிக்கறி ரூ.200-க்கு விற்பனை செய்யப்படுது. அவற்றை வாங்கி சாப்பிடுவதில் ஆர்வம் காட்டும் நம் மக்கள் ஐந்து ரூபாய் கொடுத்து கீரை வாங்குறதுக்கு எங்க கிட்ட கணக்கு பார்க்கிறார்கள். கீரையில் உள்ள சத்துக்களை தெரிந்துக் கொண்டு வருகிற தலைமுறையினர் தினமும் உணவில் கீரையை சேர்த்துக்னும்.
பழைய சோற்றை விக்கிற காலம் வந்திருச்சு அதனால கீரைகளுக்கு மதிப்பு கொடுத்து எங்கள மாதிரி விவசாயிகளையும் ஊக்குவிக்கும் வகையில் மக்கள் நடந்துக்கனும். நாங்கள் வியாபாரிக்கு ஒரு கட்டு கீரை ரூ.5-க்கு கொடுப்போம் ஆனால் அவர்கள் வெளியில் ரூ.20-30 க்கும் விக்கிறாங்க.
ஆனால் எங்களுக்கு இரண்டு ரூபாய்தான் இதில் லாபம் கிடைக்குது. விளைவித்தவனுக்கு லாபமே கிடைக்க மாட்டேங்குது வியாபாரிகளிடமும் ஒரு ரூபாய் சேர்த்து கேட்டா எங்களிடம் வாங்க மாட்டங்குறாங்க.
அரசு எங்களுக்கு பெரிதளவில் மானியங்கள் எல்லாம் இன்னும் ஒதுக்கல.அப்படியே இருந்தாலும் அது பயன் பெரும் வகையிலும் இருப்பது இல்லை. தோட்டக்கலைத் துறை சார்பாகவும் அதிகாரிகள் நேரடியா வந்து எங்களை எல்லாம் சந்திக்குறது இல்ல.எங்களுடைய பிரச்சனைகளை நாங்கள் போய் சொன்னாலும் காது கொடுத்துக் கேட்க மாட்றாங்க.
கீரை உள்ளிட்ட விவசாய உணவுப் பொருட்களுக்கு நிரந்தர விலையை அரசு நிர்ணிக்க வேண்டும். அப்பத்தான் விவசாயி வாழுவான். விவசாயமும் வாழும். என்று கூறினார்.



















