1 ) 2024 ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் நமது வெற்றியைத் தாண்டி இந்தியா என்ற கட்டமைப்பு இருக்க வேண்டும்.
2 ) காங்கிரஸ் தலைமை தமிழ்நாட்டில் காங்கிரஸ் தலைவரை மாற்றி விடும் எனும் பேச்சு, மாற்றம் என்பது ஆரம்பம் முடிவு என்பதைக் கொண்டது.
3 ) நிர்வாகிகள் கடமையை செய்தால் வெற்றி உங்களைத் தேடிவரும், எம்.பி. மற்றும் எம்.எல்.ஏ என்ற கனவோடு மட்டுமிருந்தால் நிஜமாகாது.
4 ) காந்தியடிகள் தோற்றுவித்த காங்கிரஸ் இந்தியாவை ஒற்றுமைப் படுத்தியது. தற்போது பாஜக முஸ்லீம், தலீத்துகளை நிராகரித்து இந்தியாவை துண்டாட நினைக்கிறது
5 ) தமிழ்நாட்டின் உரிமைகளை உறுதிப்பட பேச வேண்டும்.
6 ) காங்கிரஸ் நிர்வாகிகள் களத்தில் இறங்கிப் பணியாற்றுங்கள், வீட்டு வாசலில் காங்கிரஸ் கொடியினை ஏற்றுங்கள் கட்சி வளர்ச்சியை பெருக்குங்கள், கூட்டணி கட்சிகள் மீது பொறுப்புகளை தள்ளி விட்டு, பொறுப்பற்று நடந்து கொள்ளாதீர்கள்.
கும்பகோணம், ஆக. 31 –
அடுத்த ஆண்டு நடைப்பெறவிருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் வெற்றிப்பெற வேண்டும் என்பதைத் தாண்டி, இந்தியா என்ற அமைப்பு இருக்க வேண்டும் என்பதே நமது நோக்கம் மற்றும் கடமையாக கொண்டு அத்தேர்தலில் வெற்றிப்பெற வேண்டும் என கும்பகோணத்தில் நடைப்பெற்ற சோழ மண்டல, வட்டார நகர வாக்குச்சாவடி காங்கிரஸ் நிர்வாகிகள் பாசறை பயிற்சி பயிலரங்க கூட்டத்தில் உரை நிகழ்த்தினார்.
கும்பகோணத்தில் காங்கிரஸ் கட்சியின் சோழ மண்டல வட்டார, நகர வாக்குசாவடி காங்கிரஸ் நிர்வாகிகளுக்கான பயிற்சி பாசறைக் கூட்டம் நடைபெற்றது. அதில் தமிழகத் தலைவர் கே.எஸ்.அழகிரி, முன்னாள் மத்திய அமைச்சர் மணிசங்கரய்யர், கர்நாடகா மாநில சுகாதாரத்துறை அமைச்சரும், தமிழக பொறுப்பாளருமான தினேஷ் குண்டு ராவ் உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியத்தலைவர்கள் அக்கூட்டத்தில் பங்கேற்றனர்.
மேலும் அக்கூட்டத்தில் உரை நிகழ்த்திய தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.எஸ்.அழகிரி எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் நமது வெற்றி என்பதைத் தாண்டி, இந்தியா என்ற கட்டமைப்பு சிதைந்து விடாமல் பாதுகாக்க வேண்டும் என்பதை குறிக்கோளாக நாம் கொண்டு, அத்தேர்தலை எதிர் கொள்ள வேண்டிய கட்டாயத்தில் தற்போது இருந்து வருகிறோம் எனவும் அதற்காக நாம் அனைவரும் கடுமையாக பணியாற்றவேண்டும் என்ற பொருள் பட நிர்வாகிகளிடம் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து அகில இந்திய காங்கிரஸ் தலைமை தமிழ்நாட்டின் காங்கிரஸ் கமிட்டி தலைவரை மாற்றிவிடும் என பலர் பேசி வந்தார்கள். இருப்பினும் நாம் அனைவரும் ஒன்றைப் புரிந்துக்கொள்ள வேண்டும் மாற்றம் என்பதே ஆரம்பம் முடிவு எனபதில் செயல் படுகிறது.ஆதலால் அதுக்குறித்து கவலைப்பட தேவையில்லை என்றவாறு குறிப்பிட்ட அவர் தொடர்ந்து,
நிர்வாகிகள் பொறுப்பில் இருக்கிறோம் என்பதால் எம்.பி. எம்.எல்.ஏ என்ற கனவுகளை மட்டுமே நம்பி நிஜத்தை கைவிட்டு விடாதீர்கள், தங்களுக்கு வழங்கப்பட்டுள்ள கடமைகளின் பொறுப்புணர்ந்து கடுமையாக செயல்படுங்கள் வெற்றி உங்கள் பின்னால் வரும், நீங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாத பல்வேறு புதிய பொறுப்புகள் உங்களுக்கு கிட்டும் என்றவாறு தெரிவித்தார்.
மகாத்மா காந்தியடிகளால் தோற்றுவிக்கப்பட்ட காங்கிரஸ் கட்சி நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களையும் ஒன்றிணைத்து பாது காத்து வந்தது. ஆனால் தற்போது பாஜக மற்றும் ஆர்.எஸ்.எஸ் இயக்கங்களால் 30 கோடி முஸ்லீம்கள் மற்றும் 20 கோடி தலித்களை நிராகரித்து விட்டு இந்தியாவை துண்டாட நினைக்கிறதெனவும், மேலும் மறைந்த பிரதமர் நேரு காஷ்மீர் மக்களை ஒன்றிணைத்தார். எனவும், கடந்த 5 ஆயிரம் ஆண்டுகளாக இந்தியா இருக்கிறது. ஆனால் பல பிராந்தியங்களாகச் செயல்பட்டு வந்திருக்கிறது.
காங்கிரஸ் கட்சியில் இந்துக்கள் அதிகமாக இருக்கின்றனர். ஆனால் அனைத்து மதத்தினரையும் அரவணைத்துச் செல்லும் கட்சியாக காங்கிரஸ் உள்ளது எனவும், எனவே ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.கவினரை தமிழ்நாட்டில் உள்ளே வராது தொடர்ந்து போராடிட வேண்டும் என்ற அவர், காவிரி நதிநீர்ப் பிரச்சனையை தற்போது எதிர்கட்சிகள் கிளப்பினர். ஆனால் காங்கிரஸ் கட்சி, முதல்வர் ஸ்டாலின் எடுக்கும் சட்ட முயற்சிக்கு ஆதரவு அளிக்கும் என்றோம், எப்போதும் இருப்போம் என்ற அவர், கர்நாடக முதல்வரை நாங்கள் கேட்டபோது, கர்நாடகாவிலுள்ள பா.ஜ.க-வினர் எதிர்ப்பு தெரிவித்து, அரசியல் செய்கிறார்கள் என்கின்றனர். கர்நாடகாவில் காவிரி தண்ணீர் திறப்பைக் கண்டித்து முதலில் குரல் கொடுத்தது முன்னாள் பா.ஜ.க முதல்வர் பொம்மை, பிறகு எடியூரப்பா, குமாரசாமி ஆகியோர் எதிர்க்கின்றனர்.
மேலும் அப்பிரச்சினைக் குறித்து தமிழக பா.ஜ.க தலைவர் யாரும் வாய்திறக்கவில்லை. பா.ஜ.க புதியதாக ஒரு சில திட்டங்கள் கூட செயல்படுத்தவில்லை என குற்றம் சாட்டிய அவர், தமிழக அரசிடமிருந்து ஒன்பது சதவிகிதம் வரியைப் பெற்றுக் கொண்டு, ஒரு சதவிகிதம்தான் திருப்பிக் கொடுக்கின்றனர். சமீபத்தில் சி.ஏ.ஜி அறிக்கையில் 7.5 லட்சம் கோடி ஊழல் நடத்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்.
இந்தியா முழுவதும் உள்ள 600 செக்போஸ்டுகளில் 5 செக்போஸ்டுகளில் கணக்கில் ரூ.132 கோடி ஊழல் நடந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர். கடலுர் மாவட்டம், பரனூர் செக்போஸ்ட்டில் சுமார் ரூ.6.5 கோடி முறைகேடு நடந்திருப்பதாகத் தெரிவித்திருக்கின்றனர்என்றார்.
தமிழகத்தில் காங்கிரஸ் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் உங்கள் கடமையைச் செய்யுங்கள், வெற்றி உங்களைத் தேடி வரும். நாற்காலியில் உட்கார்ந்துக்கொண்டு எம்.எல்.ஏ., எம்.பி., ஆகிவிடலாம் என்று கனவு காணாதீர்கள். களத்தில் இறங்கி பணியாற்றினால் நீங்கள் நினைப்பது நடக்கும் என்றார்.
மேலும் உங்கள் வீட்டுவாசலில் காங்கிரஸ் கட்சி கொடியேற்றுங்கள். உங்கள் தெருவிலுள்ள நண்பர்கள், உறவினர்களிடம் கூறி காங்கிரஸ் கொடியேற்றச் சொல்லுங்கள். கட்சி தானாக வளரும். நாடாளுமன்றத் தேர்தலுக்கு இன்னும் எட்டு மாதங்கள்தான் இருக்கின்றன. தமிழகத்தில் கூட்டணி பலமாக இருக்கிறது. ஆகவே உங்கள் தெருவிலுள்ள கூட்டணிக் கட்சி வாக்குகளைச் சிதறாமல் கவனித்துக்கொள்ளுங்கள், வெற்றி நமக்குதான். கூட்டணிக் கட்சி பார்த்துக்கொள்ளும் என்று பொறுப்புக்களை தட்டிக்கழிக்க நினைக்காதீர்கள் என்றவாறு அக்கூட்டத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித்தலைவர் கே.எஸ்.அழகிரி உரைநிகழ்த்தினார்.
முன்னதாக அவருக்கு பாண்டு வாத்தியங்கள் முழங்க சிறப்பான வரவேற்பை அம்மாநகர காங்கிரஸ் கட்சியினர் வழங்கினார்கள். இக்கூட்டத்தில் திரளான சோழ மண்டல வட்டார நகர காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்.