திருவாரூர், செப். 01 –
திருவாரூர் மாவட்டம், திருவாரூர் அருகேவுள்ள நன்னிலத்தில் திமுக இளைஞரணியினர் சார்பில் அரசு கொண்டு வந்த முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தைக் கொச்சைப் படுத்தும் விதமாக செய்தி வெளியிட்ட ஈரோடு மற்றும் சேலம் மாவட்டத்தில் இருந்து வெளியாகும் தினமலர் நாளிதழினை தீயிட்டு கொளுத்தி, கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
தமிழ்நாடு அரசு 1 முதல் 5 வரை அரசு தொடக்கப்பள்ளியில் கல்விப் பயிலும் அனைத்து மாணக்கர்களுக்காக கொண்டு வந்த முதலமைச்சர் காலை உணவு திட்டம் பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்நிலையில், அத்திட்டத்தினை கொச்சைப்படுத்தும் விதமாக தினமலர் நாளிதழ் செய்தி வெளியிட்டது. உடனடியாக அதனைக் கண்டிக்கும் விதமாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அந் நாளிதழ் வெளியிட்ட செய்தியினை மேற்கோள் காட்டி கடுமையான கண்டனத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருந்தார்.
மேலும் அந்நாளிதழ் வெளியிட்டிருந்த செய்தி பள்ளி மாணவர்கள் உள்ளிட்ட தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பினரையும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. அதனைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் உட்பட அனைத்து தரப்பினரும் அந்நாளிகழுக்கு எதிரான தங்கள் கடுமையான கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில், கடந்த இரு தினங்களாக அவர்கள் வசிக்கும் பகுதிகளில் கண்டன ஆர்ப்பாட்டம் உள்ளிட்ட பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.
மேலும் அதன் தொடர்ச்சியாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் நன்னிலம் திமுக இளைஞரணி சார்பில் அவர்களின் கண்டனத்தை அந்நாளிதழுக்கு வெளிப்படுத்தும் விதமாக அந்நாளினை தீயிட்டு கொளுத்தி, அரசு திட்டத்தை கொச்சைப்படுத்தும் நாளிதழைக் கண்டிக்கிறோம், அறுவறுக்கத்தக்க செய்தியை வெளியிட்டு அறம் தவறிய தினமலர் நாளிதழை கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம் என்றவாறு அவர்கள் முழக்கங்களை எழுப்பியவாறு தொடர்ந்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மேலும் அக் கண்டன ஆர்ப்பாட்டம் திருவாரூர் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் பணங்குடி.எஸ்.குமார் தலைமையில், நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் அதில் பங்கேற்க திருவாரூர் மாவட்டம் நன்னிலம் பேருந்து நிலையத்தில் நடைப்பெற்றது.
அதில், நன்னிலம் பேரூராட்சி தலைவர் ராஜசேகரன் உள்ளிட்ட திரளான திமுகவினர் கலந்துக் கொண்டு தொடர்ந்து கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.




















