சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் நேற்றிரவு சாலையோர பாஸ்ட்புட் கடையில் உணவு சாப்பிட்டு விட்டு மது போதையில் இருந்தவர்கள் பிரச்சனையில் ஈடுபட்டு பணம் கொடுக்காமல் தப்பி ஓடிய போது சாலை தடுப்பு சுவற்றில் இருந்து தவறி கீழே விழுந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் நடந்துள்ளது. 

செய்தி சேகரிப்பு இ.சி.ஆர். பா.வினோத் கண்ணன்

சென்னை, ஆக. 31 –

சென்னை பழைய மகாபலிபுரம் சாலை செம்மஞ்சேரியில் சாலையோரம் தள்ளு வண்டியில் பாஸ்ட்புட் கடை ஒன்றில்  நேற்றிரவு சென்னை பார்க் டவுன் பகுதியை சேர்ந்த மணிகண்டன் (20), அஜித் (19), சென்னையை அடுத்த பெரும்பாக்கம் குடிசை மாற்று வாரிய 8 அடுக்கு குடியிருப்பை சேர்ந்த சாந்தகுமார் (20) ஆகியோர் பாஸ்ட்புட் கடையில் உணவு சாப்பிட சென்றுள்ளனர். 

அவர்கள் மூன்று பேரும் மது போதையில் இருந்ததாக கூறப்படுகிறது. இந் நிலையில் பாஸ்ட்புட் கடையில் உணவு சாப்பிடும் போதே உணவு மற்றும் சாஸ் பாட்டில்களை தூக்கி வீசி பிரச்சனையில் ஈடுபட்டுள்ளனர். 

பின்னர் உணவிற்கு பணம் கொடுக்காமல் அங்கிருந்து தப்பி ஓட முயற்சித்த போது சாந்தகுமாரும் அஜித்தும் இருசக்கர வாகனத்தை எடுத்துக் கொண்டு யூ டர்ன் போட்டுக் கொண்டு வர உயிரிழந்த மணிகண்டன் சாலையை கடந்த போது சாலையின் தடுப்பு சுவற்றின் மேல் ஏறியதும் தடுமாறி சாலையில் விழுந்ததில் அதிகளவில் ரத்தம் வெளியேற தொடங்கியுள்ளது. 

பாஸ்ட்புட் கடைக்காரர்கள் பணம் கேட்டு பின்னால் துறத்தி வந்ததை பார்த்த மூவரும் அங்கிருந்து தப்பி ஓடினர். மணிகண்டன் கீழே விழுந்ததில் காயம் ஏற்பட்டதால் அவரை சென்னை இராயபேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர் அவரது நண்பர்கள்.  மருத்துவமனை சென்றதும் மணிகண்டனை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறியுள்ளனர். 

இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த செம்மஞ்சேரி போலீசார் மணிகண்டன் பாஸ்ட்புட் கடைக்கு பணம் தராமல் தப்பி ஓடிய போது சாலையின் தடுப்பு சுவற்றில் இருந்து தவறி விழுந்து இறந்ததாக தெரிவித்தனர்.  மேலும் இச் சம்பவம் குறித்து மணிகண்டன் நண்பர்கள் மற்றும் பாஸ்ட்புட் கடைகாரர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here