திருவள்ளூர், ஜூலை. 28 –

திருவள்ளூர் மாவட்டம், பழவேற்காடு அரசு மருத்துவமனையில் கடந்த ஐந்து ஆண்டுகளாக மருத்துவராக பணியாற்றி வருபவர் மருத்துவர் சங்கர் அவர் பொதுமக்களுக்கு தனது சிறப்பான மருத்துவ பணியை கடந்த ஐந்தாண்டு காலமாக செய்து வந்துள்ளார். இதனால் அப்பகுதி மக்களின் மிகுந்த அன்பைப் பெற்றவரானார்.

இந்நிலையில் மருத்துவர் சங்கர் வருகின்ற ஜுலை 31 ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதனை முன்னிட்டு பழவேற்காடு மக்கள் இவருக்கு பணி ஓய்வு மற்றும் மக்களுக்கு அளித்த சிறப்பு மருத்துவ சேவையை பெருமைப் படுத்தும் வகையில் மருத்துவருக்கு பாராட்டு விழா நடத்தினார்கள்.

பழவேற்காடு அருள்மிகு காளிகாம்பாள் ஆலயத்தில் பல்வேறு மதங்களைச் சார்ந்த பிரமுகர்கள் மத நல்லிணக்கத்தை வெளிப்படுத்தும் வகையில் கலந்துக்கொண்டு அவருக்காக சிறப்பு வழிபாடு செய்யதனர்.

தொடர்ந்து, காளிகாம்பாள் ஆலயத்தில் இருந்து தியான மண்டபத்திற்கு டாக்டருக்கு மலர் தூவி மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்து வரப்பட்டு பணி நிறைவு பாராட்டு விழா நடைபெற்றது. இதில் பழவேற்காடு பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அவரது பணியின் போது செய்த பல்வேறு நிகழ்வுகளை நினைவு கூர்ந்தனர். மேலும் அவருக்கு பொன்னாடை போர்த்தி இனிப்புகள் மற்றும் பழங்கள் வழங்கி பிரியாவிடை அளித்தனர்.

இதனால் நெகிழ்ந்து போன மருத்துவர் சங்கர் கண் கலங்கி கண்ணீர் விட்டு அழுதபடி பழவேற்காடு பொதுமக்களுக்கு நன்றி கூறினார். இந்நிகழ்வு நிகழ்ச்சியில் கலந்து கொண்டவர்களுக்கு நெகிழ்சியினை ஏற்படுத்தியது. பழவேற்காடு காளிகாம்பாள் ஆலய அறங்காவலர் பி.எஸ்.பழனியப்பன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் பழவேற்காடு ஊராட்சி மன்ற தலைவர் மாலதி சரவணன், துணைத்தலைவர் ரவி, கிராம நிர்வாக அலுவலர் திருநாவுக்கரசு மற்றும் பழவேற்காடு வியாபாரிகள் சங்க நிர்வாகிகள் பலர் இதில் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here