திருவள்ளூர், ஜூலை. 28 –
திருவள்ளூர் வடக்கு மாவட்டம், பொன்னேரி தொகுதிக்குட்பட்ட சோழவரம், தச்சூர் கூட்டுச்சாலையில் புரட்சி பாரதம் கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் வழக்கறிஞர் ராஜா தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக புரட்சி பாரதம் கட்சியின் மாநில தலைவர் பூவை.ஜெகன். மூர்த்தியார் கலந்துகொண்டு கட்சி நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளை வழங்கினார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசுகையில் பூவை ஜெகன் மூர்த்தியார் கள்ளக்குறிச்சி மாணவியின் இறப்பு சம்பவம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியதாகவும், மாணவியின் மரணம் குறித்து வரும் தகவல்கள் அதிர்ச்சி அளிப்பதாகவும், பழங்குடியினருக்கு எதிராக நடைபெறும் வன்முறைக்கு என்றும் எதிர்த்து புரட்சிப்பாரதம் கட்சி குரல் கொடுக்கும் என்றும், மேலும், கும்மிடிப்பூண்டி அடுத்த தோக்கமூர் பகுதியில் தீண்டாமை சுவர் குறித்து பிரச்சினைக்கான உண்மையான நிலையைக் கண்டறிந்து சாதி ரீதியாக தீண்டாமை சுவர் எழுப்பப்பட்டிருந்தால் புரட்சி பாரதம் கட்சியினரால் அச்சுவர் இடிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், இந்த கூட்டத்தில் மாநில மாவட்ட ஒன்றிய நிர்வாகிகள் மற்றும் கும்மிடிப்பூண்டி மீஞ்சூர் எல்லாபுரம் பொன்னேரி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.முன்னதாக ஆமூர் பகுதியில் கட்சியின் பொறுப்பாளராக இருந்து மறைந்த எம். மதியழகன் அவர்களுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.


















