கும்பகோணம், மார்ச். 10 –
108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும் கல்கருட தலமாக போற்றப்படும் கும்பகோனம் அருகே உள்ள நாச்சியார்கோவில் சீனிவாசப் பெருமாள் திருக்கோவில் பங்குனி தேர் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது இந்நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவில் வஞ்சுளவல்லிதாயார் சமேத ஸ்ரீனிவாசப் பெருமாள் திருக்கோவில் 108 திவ்யதேசங்களில் ஒன்றாகும். இத்தலத்தில் திருமங்கை ஆழ்வார் நூறு பாசுரங்கள் பாடி பெருமாளை தரிசனம் செய்துள்ளார். உலகில் வேறு எங்கும் இல்லாத வகையில் இங்கு கல்லால் ஆன கருடன் தனி சன்னதி கொண்டு அருள் பாலிக்கிறார். இவருக்கு 6 கால பூஜைகள் நடைபெறுகிறது. ஆண்டுக்கு இருமுறை பிரம்மோற்சவத்தில் கல் கருட சேவை வீதி உலா நடைபெறுவது சிறப்பு அம்சமாகும். இதுப்போன்று, பல்வேறு சிறப்புக்களுடைய இவ்வாலயத்தில் பங்குனி தேர் திருவிழா பத்து தினங்கள் நடைபெறுவது வழக்கம்.
அதுப்போன்று இவ்வாண்டுக்கான விழா இன்று காலை கொடியேற்றம் பெருமாள் தாயார் கொடிமரம் அருகே எழுந்தருள பட்டாச்சாரியார்கள் வேத மந்திரம் ஒலிக்க, நாதஸ்வர மேள தாளம் முழங்க, கொடி மரத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்து, கருடாழ்வார் சின்னம் வரையப்பட்ட கொடி ஏற்றி வைக்கப்பட்டு கொடிமரத்திற்கும், பெருமாள் மற்றும் தாயாருக்கும் அலங்கார தீபாராதனை செய்யப்பட்டது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர் இதனைத் தொடர்ந்து விழாவின் முக்கிய நிகழ்ச்சியான கல்கருட சேவையானது வருகிற 13-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெறுகிறது அதனை தொடர்ந்து பங்குனி திருத்தேரோட்டம் 18ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை நடைபெறுகிறது நிறைவாக 10ம் நாளான, 20ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விடையாற்றியுடன் இவ்வாண்டிற்காண பங்குனி பெருவிழா இனிதே நிறைவு பெறுகிறது.