திருவாரூர், ஆக. 22 –

திருவாரூர் மாவட்டம், நன்னிலம் தாலுகாவிற்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ளது தலையூர் ஊராட்சியாகும். மேலும் இவ்வூராட்சியில், தலையூர், பணங்காட்டாங்குடி, நாடாகுடி, கோவில்பத்து, கதிராமங்கலம் , மானாந்தெரு, கீழகடுவங்குடி உள்ளிட்ட 7 கிராமங்கள்  உள்ளது.

இந்நிலையில் ஏற்கனவே தலையூர் கிராமத்தில் தாய் அங்காடி செயல்பட்டு வருகிறது. மேலும் இவ்வங்காடியை தலைமையிடமாக கொண்டு, பணங்காட்டாங்குடி, நாடாகுடி ஆகிய கிராமங்களிலும் பகுதி நேர அங்காடியின் செயல்பாடு நடைப்பெற்று வருவதாக தெரிகிறது.

அதனைப் போல, கதிராமங்கலம், கோவில் பத்து ஆகிய கிராமங்களை இணைத்து, அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் புதிய அங்காடி ஒன்று கதிராமங்கலம் பகுதியில் கட்டுவதற்கு அரசின் ஒப்புதல் பெறப்பட்டு  அதற்கான பணிகள் துவங்கிட கட்டுமான பொருட்கள் வரவழைக்கப்பட்டு, பணிகள் ஆரம்பிக்கப்பட்ட நிலையில், தலையூர் ஊராட்சியில் உள்ள மக்களும் தங்கள் பகுதிக்கு அங்காடி வேணும் என தெரிவித்ததால் அப்பணிகள் உடனடியாக நிறுத்தப்பட்டு விட்டது.

தொடர்ந்து பணிகள் நிறுத்தப்பட்டு மூன்று மாதத்திற்கும் மேலான நிலையில், அப்பிரச்சினை தொடர்பாக அரசு சார்பில் ஒரே ஊராட்சிக்குட்பட்ட இரண்டு கிராமங்களுக்கும் இடையே அதிகாரிகள் மட்டத்தில் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்பேச்சு வார்த்தையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படாததால் அங்காடி கட்டும் திட்டத்தை அதிகாரிகள் கைவிட்டனர்.

இந்த நிலையில் அங்காடி கட்டாமல் இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரே ஊராட்சியில் ( தலையூர் ) இருக்கக்கூடிய மற்ற கிராமங்களான கதிராமங்கலம் மற்றும் கோவில் பத்து கிராம மக்கள் 200- க்கும் மேற்பட்டோர்  கொல்லுமாங்குடி காரைக்கால் சாலையில் பாவட்டகுடி பகுதியில் பேரணியாக நடந்து வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு அதன் பிறகு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.

மேலும் அப்பிரச்சினைக் குறித்து, ஒரே ஊராட்சிக்குட்பட்ட இரண்டு கிராமத்தைச் சார்ந்த மக்கள் அவரவர் பக்க நியாயங்களை தொடர்ந்து சொல்லி வருவதால் அரசு திட்டப்பணி யாருக்கும் பயனில்லாமல் தாமதமாகி வருகிறது என அப்பகுதி வாழ் சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவிக்கின்றனர். மேலும் மாவட்ட நிர்வாகம் உடனடியாக இப்பிரச்சினையில் தலையீட்டு உரிய நடவடிக்கை மேற் கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கின்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here