சென்னை, ஏப். 09 –
சென்னை ஓ.எம்.ஆர் சாலை கந்தன்சாவடியில் உள்ள உலக வர்த்தக மையத்தில் செயல்பட்டு வரும் கிஸ்ஃபிளோ என்ற ஐடி நிறுவனம் கடந்த 10 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் 10 நபர்களை கொண்டு துவங்கப்பட்டது. இன்று கிஸ்ஃபிளோ ஐடி நிறுவனத்தில் தற்பொழுது 450 ஊழியர்களுடன் இயங்கி அதன் வளர்ச்சியை உயர்த்தி வருகிறது.
இதன் தலைமை செயல் அதிகாரியும், நிறுவனருமான சுரேஷ் சம்பந்தம் முயற்சியில் இந்தியாவில் வருவாய் மற்றும் பிராஜெக்ட் அடிப்படையில் 10வது இடத்தில் இந்நிறுவனம் இருப்பதாக கூறுகின்றனர்.
இந் நிறுவனத்தின் 10 வது ஆண்டு துவக்கவிழா நேற்று நடைப்பெற்றது. அவ்விழாவினை சிறப்பிக்கும் வகையில் ஆரம்ப காலக்கட்டம் முதல் இன்றுவரை பல்வேறு நிறுவனத்தின் ஏற்றத்தாழ்வுகளில் பங்கேற்று எவ்வித இடர்களுக்கும் தங்களை உட்படுத்திக்கொள்ளாமல் தங்களோடு உறுதியுடன் இருந்து செயல்பட்ட ஆதி, விவேக், கெளசிக்ராம், பிரசன்னா, தினேஷ் ஆகிய ஐந்து பேருக்கும் ரூபாய் ஒரு கோடி மதிப்பிலான பி.எம்.டபிள்யூ சொகுசு காரை பரிசாக வழங்கினார் அந்நிறுவன தலைவர். இந்நிகழ்வில் குடும்பத்தோடு வந்து காரை பெற்றுக் கொண்ட ஊழியர்கள் மிகுந்த பெருமிதம் கொண்டனர்.
இது குறித்து தலைமை நிர்வாக அதிகாரி(CEO) சுரேஷ் சம்பந்தமிடம் கேட்ட போது கம்பெனி துவங்கியது முதல் தற்போது வரை என்னோடு பயணித்து வரும் ஊழியர்கள் எந்த சூழ்நிலையிலும், பிற நிறுவனங்கள் அதிக ஊதியம் தருவதாக கூறியும் என்னை விட்டு செல்லாமல் தொடர்ந்து உழைத்தனர். அதற்கு மதிப்பளிக்கும் வகையில் அவர்களை குடும்பதோடு கெட் டூ கெதர் பார்ட்டி இருப்பதாக வரவழைத்து அவர்களுக்கு கார் பரிசாக வழங்கி இன்ப அதிர்ச்சியை அளித்து இருக்கிறோம் என்றார் . இதன் மதிப்பு சுமார் 1 கோடி எனவும் தெரிவித்தார்.
பின்னர் காரை பரிசாக பெற்ற விவேக் கூறுகையில் எதிர்பார்க்கமுடியாத இன்பதிர்ச்சியை கொடுத்திருக்கிறார். குடும்பமே மகிழ்ச்சியாக உணர்கிறார்கள், தனது கல்லூரி படிப்பை முடித்து விட்டு அனுபவம் இல்லாமல் சேர்ந்தோம் தற்போது 10 ஆண்டுகளில் ஒன்றினைந்து உழைத்தோம் அதற்காக கார் பரிசாக கிடைத்திருப்பது, மிகுந்த மகிழ்ச்சியை தருவதாக தெரிவித்தனர்.
ஆதி ஒரு படி மேலே சென்று தான் எப்படியாவது வாங்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்த கனவு காரை நனவாக்கி தனது சிஇஓ வாங்கிக் கொடுத்திருப்பது மகிழ்ச்சியாக உள்ளது. என்னிடம் ஒரு முறை விளையாட்டாக கேட்டார் என்ன கார் பிடிக்கும் என்று, நானும் கூறினேன் ஆனால் அந்த காரையே பரிசாக வாங்கி கொடுத்திருக்கிறார் நான் இதை சற்றும் எதிர்பார்க்கவில்லை என்றார்.

























