கும்பகோணம், மார்ச். 22 –
கும்பகோணம் அருகே உள்ள முட்டிக்குடி பகுதியில் உள்ள மினி சூப்பர் மார்க்கெட் மற்றும் ஜவுளி கடைகளில் தீ விபத்து ஏற்பட்டது, இவ்விபத்தில் சுமார் ரூ.4 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்துள்ளதாக தெரிய வருகிறது.
கும்பகோணம் அருகே திருவிடைமருதூர் தாலுகா கட்டாநகரம் பகுதியைச் சேர்ந்தவர் பழனி இவர் முட்டக்குடி மெயின்ரோட்டில் மினி சூப்பர் மார்க்கெட் மற்றும் ஜவுளி கடை நடத்தி வருகிறார். இங்கு அனைத்து விதமான மளிகை பொருட்கள் காய்கறிகள் துணிகள் என இருப்பு வைத்து சில்லறை வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று இரவு வழக்கம் போல் கடையை பூட்டிவிட்டு வீட்டிற்கு சென்றுவிட்டார் அதிகாலை 3மணி அளவில் சூப்பர் மார்க்கெட்டில் திடீரென தீப்பிடித்து எரிந்துள்ளது.
அக்கம்பக்கத்தினர் தொலைபேசி மூலம் கடை உரிமையாளர் பழனி மற்றும் தீயணைப்புத் துறைக்கும் தகவல் கொடுத்தனர். தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மேலும் தீ பரவாமல் இருக்க ஒரு மணி நேரம் போராடி தீயை அணைத்தனர். கடை முழுவதும் உள்ள மளிகை பொருட்கள் துணிமணிகள் காய்கறிகள் அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகின சேதமடைந்த பொருட்களின் மதிப்பு சுமார் ரூ 4 லட்சம் எனத்தகவல் தெரிய வருகிறது. முழுமையான சேத மதிப்பு மீட்பு பணிக்கு பின்பே தெரிய வரும் எனக்கூறப்படுகிறது. இந்த தீ விபத்து எப்படி ஏற்பட்டது என்பது காரணம் குறித்து திருப்பனந்தாள் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.