தஞ்சாவூர், மார்ச். 09 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு
தஞ்சாவூர் மாவட்டம், உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி வெளி மாநிலம் வெளிநாடுகளில் இருந்து நாள் தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். மேலும் இந்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் இருக்கும் அத் தஞ்சை பெரிய கோவில் உலக பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாக திகழ்ந்து வருகிறது என்பது மேலும்சிறப்பாகும்.
அத்திருக்கோயிலுக்கு மாலை மற்றும் இரவு நேரங்களில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருவது வழக்கமாகும். இந்நிலையில் இன்றிரவு சுமார் 8 மணியளவில் தஞ்சை மாநகரில் மின்தடை ஏற்பட்டது.
அதே சமயத்தில் தஞ்சை பெரிய கோவிலிலும் மின்விநியோகம் திடீரென தடைபட்டதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. மேலும் தற்போது மகா சிவராத்திரியை முன்னிட்டு பல்வேறு நிகழ்ச்சிகள் கடந்த இரண்டு தினங்களாக அங்கு நடைப்பெற்று வருகிறது. அதனால் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகளின் வருகை மிகவும் அதிகமாக காணப்பட்டது.
அதனால் அங்கு பரபரப்பு அடைந்த மக்கள் அவரவர் தங்கள் கைகளில் வைத்திருந்த செல்போனில் உள்ள டார்ச் லைட்டை எரிய வைத்த படி ஓரிடத்தில் அமர்ந்திருந்தும், மெல்ல மெல்ல வெளியேறியும் கொண்டிருந்தனர். பின்பு ஜெனரேட்டர் இயக்கப்பட்ட பிறகு மின் வினியோகமும் மீண்டும் வழங்கப்பட்டது.
அந்த இடைப்பட்ட பத்து நிமிட மின்தடையால் அங்கு வெகுவாக பரபரப்பு காணப்பட்டது. மேலும் இதுவரை இது போல் மின்தடை ஏற்படாத பட்சத்தில் திடீரென மின்தடை ஏற்பட்டதற்கான காரணம் என்ன என்பதுக் குறித்து கோவில் அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.


















