கும்பகோணம், ஏப். 21 –
கும்பகோணம் தனியார் மெட்ரிக் மேனிலைப்பள்ளியில், தமிழர்களின் கலை, பண்பாடு, நாகரீகம், வாழ்வியல்முறைகள், பாரம்பரியத்தை தொடர்ந்து பாதுகாக்கவும், மீட்டெடுக்கவும், இதன் சிறப்புகளையும், பெருமைகளையும், நம் இளைய தலைமுறையினருக்கு அறிமுகம் செய்து அவர்கள் அதனை பின்பற்றிடும் வகையில், பள்ளி மாணவ மாணவியர்களின், தமிழர் கலாச்சார கண்காட்சி இன்று கோலாகலமாக நடைபெற்றது.
கும்பகோணம் செட்டிமண்டபம் புறவழிச்சாலையில் அமைந்துள்ள கார்த்தி வித்யாலயா மெட்ரிக் பள்ளியில் தமிழரின் பாரம்பரியத்தை போற்றும் வகையிலும் தமிழரின் கலாச்சாரத்தை பேணிக்காக்கும் வகையில் தமிழர் கலாச்சார கண்காட்சி இன்று சிறப்பாக நடைபெற்றது, ‘தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவற்கொரு குணமுண்டு’ என்று தமிழரை அடையாளப்படுத்தினார். நாமக்கல் கவிஞர். வேறு எந்த இனத்திற்கும் மொழிக்கும் இல்லாத பெருமை தமிழுக்கும் தமிழருக்கும் உண்டு. காரணம் மனித இனம் எப்படி வாழ வேண்டும் என்பதனை விட எப்படி வாழக் கூடாது என்ற வாழ்வியலை கற்றுக்கொடுத்த தமிழரின் பண்பாட்டு அடிச்சுவடுகள் இன்றும் உலகம் முழுவதிலும் தடம் பதித்து இருக்கிறது. என்றால் உயர்ந்த சிந்தனைகளையும், உயர்வான எண்ணங்களையும் சமூகம் எனும் மணற்பரப்பில் விதைத்துச் சென்றிருக்கிறது. என்று தானே அர்த்தம் ! பண்பட்ட மண்ணில் தான் செடிகளும் கொடிகளும் துளிர் விடும். அதுபோல இந்த சமூகம் பண்பட வேண்டும் என்றால் நல்ல பண்பாடு இருக்க வேண்டும் என்பதனை தமிழினம் இத்தரணிக்குக் கற்று கொடுத்து இருக்கிறது. நாடாண்ட மன்னன் முதல் குடிசை வாழும் சாதாரண குடிமகன் வரை குலம் காக்கும் பண்பாட்டை கட்டிக்காத்து பார் போற்ற வாழ்ந்த இனம் தமிழினம். இது வரலாற்றுப் பதிவு. இலக்கியங்கள் தொடங்கி இன்றைய இணையம் வரைக்கும் தமிழரின் பண்பாடும் பதிவுகள் தன்னைக் காட்சிப்படுத்தி நிற்கிறது.
நாகரீகம் என்ற பெயரில் தலைமுறை கடந்து விட்டாலும் தமிழரின் பண்பாட்டு எச்சங்கள் வாழ்வியலின் ஒவ்வொரு தளத்திலும் பின் தொடர்ந்தே வருகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த தமிழரின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் போற்றும் வகையிலும் இன்றைய வளரும் தலைமுறையான மாணவ மாணவியர்கள் அறிந்து கொள்ளும் விதத்திலும் இந்நிகழ்ச்சி சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
இந்நிகழ்ச்சியில் தமிழர்கள் தொடக்க காலத்தில் பயன்படுத்திய பொருட்கள், மண்பாண்டங்கள் பித்தளை, செப்பு பாத்திரங்கள் ஓலைச்சுவடிகள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன.
வீரத்தைப் பறைசாற்றும் விதமாக பழங்கால போர் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. குறிப்பாக ஐவகை நிலங்கள், தமிழர்கள் வாழும் முறையினை அழகாக கிராமம் அமைத்து குடும்ப முறை, திருமணமுறை பஞ்சாயத்து விழாக்கள் மருத்துவம் வழிபாட்டு முறைகள், பல்லாங்குழி, கோலி, கில்லி, சில்லுக்கோடு, கண்ணாமூச்சு, தாயம், விளையாட்டுகள், மற்றும் விதவிதமான உணவு பண்டங்கள், கம்பங்கூழ், கேழ்வரகு அடை, கேழ்வரகு தோசை, கம்மங் தேசை, உளுந்தங்களி, கீரை வடை, தேங்காய் போளி, இலை கொழுக்கட்டை, ஆகியவை இடம் பெற்றிருந்தன.
இவை அனைத்தும் மாணவ மாணவிகளை கொண்டு அமைக்கப்பட்டிருந்தது மாணவ மாணவியர்கள் தமிழரின் பண்பாட்டை அறிந்து கொண்டனர். இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட மாணவ மாணவியர்கள் நிகழ்ச்சியில் பங்கு கொண்டு தமிழர்களின் வீர விளையாட்டுகள் மல்யுத்தம், கபடி, ஜல்லிக்கட்டு ஆகியவற்றை எடுத்துரைத்தனர். மேலும் கலை நிகழ்ச்சிகளான பாம்பாட்டம், ஒயிலாட்டம், கரகாட்டம், தப்பாட்டம், மயிலாட்டம் ஆகியவையும் இடம் பெற்றிருந்தன.
இதனை பள்ளி தாளாளர் கார்த்திகேயன், மற்றும் ஏராளமான பெற்றோர் பார்வையிட்டு பரவசமடைந்து, மாணவ மாணவியர்களையும், அவர்களை உற்சாக மூட்டி தயார் செய்த ஆசிரிய பெருமக்களையும், அவர்களுக்கு உதவிய பெற்றோர்களையும் பாராட்டி மகிழ்ந்தார்.





















