கும்பகோணம்:
கும்பகோணத்தை அடுத்த கொட்டையூரில் வள்ளலார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளி மாணவியிடம் நேற்று வாலிபர் ஒருவர் தகராறு செய்துள்ளார்.
இதுபற்றி அந்த மாணவி பள்ளி ஆசிரியையிடம் தெரிவித்தார். இதைத்தொடர்ந்து தகராறில் ஈடுபட்ட வாலிபரிடம் ஆசிரியை சென்று பேசியபோது அவர் தகாத வார்த்தை பேசி உள்ளார்.
இதுபற்றி அறிந்த பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரன் சம்பவ இடம் சென்று வாலிபரை கண்டித்தார். அப்போது அந்த வாலிபர் மனோகரனை தாக்கினார். இதில் அவரது மூக்கு உடைந்தது.
இதுபற்றி மனோகரன் கும்பகோணம் கிழக்கு போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து பள்ளி தலைமை ஆசிரியர் மனோகரனை தாக்கிய வாலிபரை தேடி வருகின்றனர்.
இந்த சம்பவத்தை தொடர்ந்து தலைமை ஆசிரியரை தாக்கிய வாலிபரை கைது செய்ய கோரி அப்பள்ளியில் பணியாற்றும் ஆசிரியர்களும், ஆசிரியைகளும் இன்று வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் மாணவ-மாணவிகளின் கல்வி பாதிக்கப்பட்டது.