மதுக்கூர், ஜூன். 09 –
தழைச்சத்தை மண்ணில் நிலை நிறுத்துவதில் தலையாய பங்கு வகிப்பது தக்கைபூண்டு என்பதை மதுக்கூர் வட்டார முன்னோடி விவசாயியான கோவிந்தராஜ் தனது கருத்தினை தெரிவித்தார்.
மதுக்கூர் வட்டாரத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் மதுக்கூர் வடக்கு பஞ்சாயத்தில் தென்னையில் ஒருங்கிணைந்த ஊட்டச்சத்து நிர்வாகம் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு உயிர் உரங்கள் போரான் நுண்ணூட்டச்சத்து மற்றும் தக்கைபூண்டு மானியத்தில் வழங்கப்பட்டது.
அப்போது, மதுக்கூர் வடக்கு சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ் அவர்கள் கடந்த 35 வருடங்களாக விவசாயத்தில் பல்வேறு பயிர்கள் சாகுபடி செய்து தொழிலாளர் பற்றாக்குறையின் காரணமாக தற்பொழுது தென்னை சாகுபடிக்கு மாறியுள்ளார். தென்னையில் ஊடுபயிராக பசுந்தாள் உரப் பயிர்களான தக்கைப்பூண்டு விதைத்து தற்போது பயிரானது முப்பது முப்பத்தைந்து நாள் வயதில் உள்ளது.
அதுப் பற்றி விவசாயி தன் அனுபவத்தில் சணப்பை விட தக்கைப்பூண்டு வளிமண்டலத்தில் இருந்து தழைச்சத்தை கிரகித்து மண்ணில் நிலை நிறுத்துவதில் சிறந்த பங்களிப்புதாக அவர் தெரிவித்தார். வேளாண் உதவி அலுவலர்கள் ஜெரால்டு மற்றும் பூமிநாதன் விவசாயி உடன் தக்கைப்பூண்டு வேர் பகுதியினை எடுத்து ஆய்வு செய்ததில் வேர்களில் அப்போது மிக அதிக அளவில் வேர் முடிச்சுகள் காணப்பட்டது.
இந்த வேர் முடிச்சுகள் தழைச்சத்தை கிரகித்து மண்ணில் நிலை நிறுத்துவதிலும் மண்ணின் கட்டமைப்பை மாற்றுவதிலும் கரிம அமிலங்கள் அதிகரிப்பதால் நுண்ணுயிர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதிலும் கிட்டாத நிலையில் உள்ள சத்துக்களை கிடைக்க செய்வதிலும் முக்கிய பங்காற்றுகிறது என்பதை விளக்கிக் கூறினார்.
மேலும், இயற்கை விவசாயத்தில் யூரியாவின் அளவை குறைத்து மாற்றாக இதுபோன்று பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிடுவதால் விவசாயிகளின் உரச் செலவு குறைவதோடு அறுவடை செய்யப்படும் தழையானது மண்ணில் மடக்கி உழுவதன் மூலம் மண்ணின் கரிம வளமும் அதிகரிக்கிறது மண்ணின் கட்டமைப்பு மாற்றப்பட்டு தென்னை முதலான பயிர்களுக்கும் பிற பயிர்களுக்கும் புதிய வேர்கள் உருவாவதற்கான கட்டமைப்பினை உருவாக்கி தருகிறது.
மேலும், புதிய உறிஞ்சி வேர்கள் அதிக அளவு நீர் மற்றும் சத்தினை எடுத்துக்கொண்டு பயிரின் வளர்ச்சிக்கு மிக உறுதுணையாக இருக்கும் எனவே அனைத்து விவசாயிகளும் ரசாயன உர பயன்பாட்டை குறைத்து பசுந்தாள் உரப் பயிர்களை பயிரிட்டு பயன் பெறுமாறு மதுக்கூர் வேளான் உதவி இயக்குனர் திலகவதி கேட்டுக்கொண்டார்.