தென்னை விவசாயிகளை அரசு பாதுகாக்க வேண்டும் என்ற கோரிக்கை முழக்கம் எழுப்பி தென்னை விவசாயிகள் அறந்தாங்கி முக்கம் பகுதியில் சாலை மறியல் போராட்டம் …
தஞ்சாவூர், பிப். 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு ..
தமிழ்நாடு அரசு ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதிலாக, கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், நல்லெண்ணெய் வழங்க வேண்டும். எனவும், மேலும் திமுக அரசு தனது தேர்தல் வாக்குறுதியாக, தேங்காய் எண்ணெயை விவசாயிகளிடமிருந்து நேரடியாக கொள்முதல் செய்து நியாய விலை கடைகளில் விற்பனை செய்யப்படும் என உறுதி அளித்ததை நிறைவேற்ற வேண்டும். என்பதை வலியுறுத்தியும், மேலும் தேங்காய்க்கு கட்டுபடியான விலை வழங்க வேண்டும். கொப்பரைத் தேங்காய்க்கு கூடுதலான விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட போராட்டங்களை தென்னை விவசாயிகள் நடத்தியும், அமைச்சர்களை சந்தித்து பேசியும், இதுவரை எவ்வித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து, தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டையில் (அறந்தாங்கி முக்கம் பகுதியில்) கிழக்கு கடற்கரை தென்னை விவசாயிகள் சங்க தலைவர் மருங்கப்பள்ளம் காந்தி தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதில் பல்வேறு தென்னை விவசாயம் சங்க அமைப்புகள், விவசாயிகள் சங்கங்கள் என 200 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தென்னை விவசாயிகளை பட்டுக்கோட்டை டி எஸ் பி பிருத்திவிராஜ் சவுகான் தலைமையிலான காவல்துறையினர் கைது செய்து தனியார் திருமண மண்டபத்திற்கு கொண்டு சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக சுமார் அரை மணி நேரத்திற்கும் மேலாக அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது



















