திருவண்ணாமலை ஜூலை.22-
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த தேசூர் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளுக்கு கடந்த 3 மாதங்களாக பணம் வழங்கப்படவில்லை என கூறிவிவசாயிகள் கடந்த 15ந் தேதி போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் பா.முருகேஷ் உத்தரவின்பேரில் வேளாண் விற்பனை குழு செயலாளர் தருமராஜன் விசாரணை நடத்தினார். அதில் 5.5.2021 முதல் 25.06.2021 வரை 150 விவசாயிகளிடமிருந்து 5081 நெல்மூட்டைகளை கொள்முதல் செய்துவிட்டு ரூ.53 லட்சத்து 71 ஆயிரத்து 142ஐ வழங்காமல் சேத்துப்பட்டு பழம்பேட்டை அழகிரி தெருவில் வசிக்கும் நெல்வியாபாரி சீனுவாசன் (46) மோசடி செய்திருப்பது உறுதியானது. இதையடுத்து உரிய காலத்துக்குள் கொள்முதல் செய்யப்பட்ட நெல்மூட்டைகளுக்கு பணம் வழங்காத வியாபாரி சீனுவாசனை தொடர்ந்து நெல்மூட்டைகளை கொள்முதல் செய்ய அனுமதித்த ஒழுங்குமுறை விற்பனை கூட கண்காணிப்பாளர் ரோகேஷ் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க ஆட்சியர் பா.முருகேஷ் பரிந்துரை செய்தார். அதன் பேரில் கண்காணிப்பாளர் ரோகேஷை பணியிட நீக்கம் செய்து வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை ஆணையர் மு.வள்ளலார் உத்தரவிட்டுள்ளார்.